FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆளுநர் மாளிகை வளாக அரசுப் பள்ளியை மூட உத்தரவு

ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரின் இதயப் பகுதியாக விளங்கும் சிவாஜி நகரில், விதானசெளதா கட்டடத்துக்கு அருகே ஆளுநர் மாளிகை வளாகத்தில், அரசு முதல் நிலை ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆளுநர் செயலகத்தில் பணியாற்றி வரும் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குழந்தைகள் படிக்க வசதியாக 1976-ஆம் ஆண்டு இப் பள்ளி தொடங்கப்பட்டது.

இப் பள்ளியில், சுமார் 200 மாணவர்கள் படித்து வந்த நிலையில், சிலர் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துவிட்டதால், இப் பள்ளியில் மாணவர்களின் வருகை கணிசமாக குறைந்தன.

Advertisement

Advertisement

தற்போது, இப் பள்ளியில் 16 மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனசெப்டம்பர் மாத இறுதிக்குள் பள்ளியை மூடிவிடுமாறு பெங்களூரு வடக்கு வட்டாரக் கல்வி அதிகாரி வி.ரமேஷுக்கு ஆளுநர் செயலகம் ஆக.29-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வசந்த் நகரில் உள்ள அரசு ஆரம்ப கன்னடம் மற்றும் தமிழ் பள்ளியுடன் இப்பள்ளியை இணைக்க, அரசு யோசித்து வருவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பள்ளியை மூடுமாறு ஆளுநர் செயலகம் எழுதியுள்ள கடிதம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோபத்தை கிளறியுள்ளது.

இந்த பள்ளியை மூடக்கூடாது என்று சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, கல்வித்துறை (ஆரம்பப் பள்ளி) இயக்குநர் கே.ஆனந்தாவிடம் மனு அளித்துள்ளார்.

இது பற்றி நரசிம்மமூர்த்தி கூறுகையில், ஆளுநர் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட பள்ளியை மூடுமாறு அந்த செயலகமே மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது வேதனை அளிக்கிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை இப் பள்ளியில் சேர்க்காமல், தனியார் பள்ளி மோகத்தால், அரசுப் பள்ளியை புறக்கணிப்பது சரியல்ல.

ஆக.18-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அரசு மற்றும் பொது நிதியில் இருந்து ஊதியம் அல்லது ஏதாவது ஒரு வகையில் பயன்பெறும் அனைத்து அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதியியல் உறுப்பினர்கள், இதர நபர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை மாநில அரசு கல்வி வாரியம் நடத்தும் ஆரம்பப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஆளுநர் செயலகமும் அமல்படுத்தினால், அரசுப் பள்ளியை மூட வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசுப் பள்ளியை மூடும் உத்தரவை மேற்கொண்டால், தீவிர போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இதுகுறித்து, கல்வித்துறை (ஆரம்பப் பள்ளி) இயக்குநர் கே.ஆனந்தா கூறியது: ஆளுநர் மாளிகையில் உள்ள ஆரம்பப் பள்ளியை மூடும்படி ஆளுநர் செயலகம் அனுப்பியுள்ள கடிதம் என் கவனத்துக்கு வந்துள்ளது. அதே நேரம், இந்த பள்ளியை மூடக்கூடாது என்று சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி உள்ளிட்டோரும் மனு அளித்துள்ளனர். நிகழாண்டில், அரசுப் பள்ளி எதையும் மூடவில்லை. இதுபற்றி அரசின் கருத்தறிந்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments