FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேருந்து நிலையங்களில் அரை லிட்டர் குடிநீர் ரூ.1-க்கு வழங்க திட்டம்

அரசு பேருந்து நிலையங்களில் அரை லிட்டர் குடிநீரை ரூ.1-க்கு வழங்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

அரசு பேருந்து நிலையங்களில் அரை லிட்டர் குடிநீரை ரூ.1-க்கு வழங்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சொந்தமாக தயாரித்த 'ரயில் நீர்' என்ற பெயரில் நெகிழி புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல, கர்நாடக அரசு பேருந்துகளின் பயணிகளுக்குச் சொந்தமாகத் தயாரித்த தண்ணீரை நெகிழி புட்டிகளில் அடைத்து விற்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டிருந்தது. 
இப்போது இந்தத் திட்டத்தை கைவிட்டுள்ள போக்குவரத்துக் கழகம், அதற்கு மாற்றாக, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் எனப்படும் குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை அனைத்து பேருந்து நிலையங்களிலும் பொருத்தத் திட்டமிட்டுள்ளது. 
இந்தச் சுத்திகரிப்புக் கருவியில் இருந்து பெறப்படும் குடிநீரை அரை லிட்டர் ரூ.1-க்கும், ஒரு லிட்டர் ரூ.2-க்கும், 5 லிட்டர் ரூ.5-க்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 
முதல் கட்டமாக மண்டியா கோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கப்பட்டணா, பாண்டவபுரா பேருந்துநிலையங்களில் தலா ரூ.5 லட்சம் செலவில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் சுத்திகரிப்புக் கருவி நிறுவப்பட்டுள்ளது. வெகுவிரைவில், இந்தத் திட்டத்தை மாநிலத்தின் அனைத்து பேருந்துநிலையங்களிலும் விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.ஆர்.உமாசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:-
மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் தூய்மையாக்கப்பட்ட குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெவ்வேறு ஊர்களில் குடிநீரின் தரம் மாறுபடுகிறது.  தரத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அதனால்தான் சுத்திகரிப்புக் கருவிகளைப் பொருத்தவுள்ளோம். 
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் 30 பேருந்து நிலையங்களில் சுத்திகரிப்புக் கருவிகள் நிறுவப்படும். மேலும் நிதியுதவி பெற முயற்சித்துள்ளோம். நிதியுதவி கிடைக்காதபட்சத்தில் போக்குவரத்துக்கழகமே சொந்தநிதியில் சுத்திகரிப்புக் கருவிகளை நிறுவும். விரைவில் நாகமங்களா, மலவள்ளி, மேலுகோட்டே, கே.ஆர்.பேட், ஹரபனஹள்ளி, ஹரிஹரா, ஹொன்னாளி, தர்மஸ்தலா, சுப்ரமணியா, குந்தாபுரா ஆகிய பேருந்து நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள் அமைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments