தியாகிகளை நினைவுகூர வேண்டும்: சித்தராமையா
சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் அனைவரையும் எப்போதும் நாம் நினைவுகூருவது அவசியம் என்றார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் அனைவரையும் எப்போதும் நாம் நினைவுகூருவது அவசியம் என்றார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
பெங்களூரில் புதன்கிழமை புரட்சி வீரர் சங்கொல்லி ராயண்ணாவின் 221-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில் சங்கொல்லி ராயண்ணா முக்கியமானவர். அவரது தேச பக்தியை நாமெல்லாம் பின்பற்ற வேண்டும். அவரது தேச பக்தியை போற்றும் வகையில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சங்கொல்லி ராயண்ணா ஆணையம் அமைத்து, அவர் பிறந்த ஊரான சங்கொல்லி மற்றும் ஆங்கிலேயரால் அவர் தூக்கிலிடப்பட்ட நந்தகடாவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ. 260 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சங்கொல்லி ராயண்ணா தூக்கிடப்பட்ட நந்தகடாவில் ராணுவப் பள்ளியை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் அவரது பிறந்த நாளையும், குடியரசுத் தினத்தில் அவரது நினைவு நாளையும் அனுசரித்து வருகிறோம். இது அவர் தேசத்தின் மீது வைத்திருந்த பக்திக்கு சாட்சியாகியுள்ளது.
சங்கொல்லி ராயண்ணாவை போல மக்கள் மனதில் தேச பக்தியை ஊட்ட வேண்டும். தேசிய அளவில் வீட்டிற்கு ஒரு ராயண்ணா பிறந்து வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, ராயண்ணா அறக்கட்டளையின் தலைவர் சங்கொல்லி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.