FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பு மகத்தானது: முதல்வர் குமாரசாமி

நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பு மகத்தானது என்று முதல்வர் குமாரசாமி பெருமிதம் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பு மகத்தானது என்று முதல்வர் குமாரசாமி பெருமிதம் தெரிவித்தார்.
கர்நாடக அரசு சார்பில் 72-ஆவது சுதந்திர தின விழா பெங்களூரு மானக்ஷா அணிவகுப்புத் திடலில் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதல்வர் குமாரசாமி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசியது:
நவீன உலகம் கண்டன பலம் வாய்ந்த ஆயுதம் அகிம்சை. அகிம்சையை முன்வைத்து சுதந்திரத்தை வென்ற வீரமரபினர் நாமாவோம். வேற்றுமையில் ஒற்றுமையை சாதித்த ஒருசில நாடுகளில் இந்தியா முன்னோடியாக உள்ளது. நமது சுதந்திரம் பெற்றுதந்த மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், கோபாலகிருஷ்ணகோகலே, பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், மெளலானா அபுல்கலாம் அசாத், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்ட மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கத்தை காணிக்கையாக்குகிறேன்.
மகாத்மா காந்தியின் எண்ணங்களுக்கு தகுந்தபடி நமது சுதந்திர இந்தியா கட்டமைக்கப்பட்டது. "எனது வாழ்க்கையே உங்களுக்கு பாடம்' என்று காந்தியின் வார்த்தையே நமக்கெல்லாம் உந்துசக்தி. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறோம். 
இதைமுன்னிட்டு காந்தி 150-ஒரு நாடகப் பயணம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி, மாநிலம் முழுவதும் 1000 நாடகங்களை அரங்கேற்றி  அவரது பிறந்த நாளை பொருள் பொதிந்ததாக மாற்றவிருக்கிறோம். இதேபோல, இந்தியாவின் உயரத்தை உலக அளவில் பறைசாற்றிய சுவாமி விவேகானந்தர் உலக புகழ் பெற்ற சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய 125-ஆவது ஆண்டையும் கொண்டாடவிருக்கிறோம். காந்தி, விவேகானந்தரின் சித்தாந்தங்கள் நமக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
சுதந்திரத்தை பெற்ற பிறகு இந்தியா எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். அந்த சவால்களை திறம்பட கையாண்டு இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. உலகின் பலம்வாய்ந்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அறிவியல், வேளாண்மை, தொழில், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் சாதனையில் கர்நாடகத்தின் பங்களிப்பும் உள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பு மகத்தானதாகும். வீரராணி கித்தூர் சென்னம்மா, புரட்சிவீரன் சங்கொல்லி ராயண்ணா என முதல் சுதந்திரப்போராட்டத்தில் கன்னடர்கள் தீவிரமாக பங்காற்றி வந்துள்ளனர். இந்த போராட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்கள் ஏராளம். 
காந்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதில் வட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். அவரது தலைமையில்  பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றார்.


வளமான கர்நாடகத்தை கட்டமைப்போம்
வளமான கர்நாடகத்தை கட்டமைக்க அனைவரும் ஒன்றிணைவோம் என முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவில் அவர் பேசியது: தொழில்முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக கர்நாடகம் திகழ்ந்து வருகிறது. லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில்சாலைகள் உருவாகும். ஆனால், தொழில்சாலைகளில் வேலைசெய்வதற்கு தொழில் திறன் படைத்தவர்களின் குறைபாடு உள்ளது. இதைபோக்குவதற்கு பல்வேறு திட்டங்களைச்
செயல்படுத்துவோம். 
மின் உற்பத்தி: நிகழாண்டில் மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், எதிர்பார்த்த அளவுக்கு மின் உற்பத்தி இருக்கும். சூரியஒளி மின்னாற்றல் உற்பத்தியிலும் கர்நாடகம் சாதனை படைக்க உள்ளது. விவசாயிகளின் பம்ப்செட்களுக்கு இரவு நேரத்துடன் பகல்நேரத்திலும் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் உற்பத்தியில் கர்நாடகம் தன்னிறைவு பெறும். 
கல்வி: கர்நாடகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளை உலகத் தரத்தில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி வணிகமாக இருக்கக் கூடாது. அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த உள்ளோம். அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கிராமப் பகுதிகளில் தரமான கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளோம். உயர்கல்வி, இளைஞருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். இதைச் செயல்படுத்த தொழில்திறன்சார் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களும் பங்காற்ற அழைப்பு விடுக்கிறேன். அறிவியல் படிப்புகளை மாணவர்களிடையே பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
சுகாதாரம்: எல்லோருக்கும் தரமான சுகாதார வசதிகளை செய்துதர வேண்டுமென்பது எனது அரசின் நோக்கமாகும். கர்நாடகத்தில் தரமான மருத்துவமனைகள் உள்ளன. தரமான மருத்துவசிகிச்சை கர்நாடகமக்களை சென்றடைவதற்கு வசதியாக "ஆரோக்கிய கர்நாடகம்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதை பொதுமக்கள் சீராக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
கட்டுமானம்: பெங்களூரு, உலக அளவிலான நகரமாக உயர்ந்துள்ளது. இந்நகரின் அடிப்படைகட்டுமானவசதிகளை மேம்படுத்த ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரில் பதாகைகள் தேவையில்லை. இது பெங்களூரு மக்களின் விருப்பமாகும். பெங்களூரு மட்டுமல்ல, கர்நாடகமே பதாகைகள் இல்லா மாநிலமாக வேண்டும். பதாகைகள் இல்லா பெங்களூரை உருவாக்க பெங்களூரு மாநகராட்சி தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்காற்ற வேண்டும். 
பெங்களூரில் தொடர்ந்து நடத்தி வந்த விமானத் தொழில் கண்காட்சியை வேறொரு ஊருக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எனது கடிதத்திற்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று
கருதுகிறேன் என்றார்.

விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் பேசியது: 
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தொலைநோக்குச் சிந்தனையோடு நிரந்தரத் தீர்வு காண்பதும், உழைக்கும் கரங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே எமது அரசின் நோக்கம். மாநில மக்களின் மனங்களில் மனத் திருப்தி அடைந்த புன்னகை பூக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 
பயிர்க் கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும். இக்
கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்துள்ள எனது அரசு, கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.49 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிக்கடனைத் தள்ளுபடிசெய்ய முடிவு செய்துள்ளது. 
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு கடன் தொகையைத் தள்ளுபடி செய்திருக்கவில்லை.  இந்த விவகாரத்தில் அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்ட கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளோம்.  இதனால் 20.38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 
வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை அரசு வெகு விரைவில் அறிவிக்கும். பயிர்க்கடன் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதில் அவநம்பிக்கை தேவையற்றதாகும். அரசியல் நிலைப்பாட்டின் மூலம் பயிர்க்கடனைத் தள்ளுபடிசெய்வதில் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகள் விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. 
பயிர்க் கடன் தள்ளுபடியால் மட்டுமே விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறமுடியாது. இது விவசாயிகளின் ஆத்ம தைரியத்தை உயர்த்தும். வேளாண் தொழிலை லாபகரமானதாக்க என்ன செய்ய வேண்டுமென்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.  வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை பெறப்படும். 
நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு இஸ்ரேல் நாட்டின் மாதிரியை படிப்படியாகச் செயல்படுத்துவோம். வேளாண் தொழிலின் செலவைக் குறைத்து, மண்ணின் வளத்தை பெருக்கி இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களின் உதவி பெறப்படும்.
வேளாண்மையில் முன்னேற்றமடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.  விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி,  வேளாண் முறையில் நவீனத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். நவீன விவசாயம் தொடர்பான தகவல்களை விவசாயிகளுக்கு அளிப்பதற்காக மாதந்தோறும் "விவசாயிகள் உதவி' திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவோம். 
 மாநிலத்தில் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அணைகள் நிரம்பியுள்ளன. இது மகிழ்ச்சியானதாகும்.  ஆனாலும், 13 மாவட்டங்களில் குறைந்த மழை பெய்துள்ளது.  வானிலைக்குத் தகுந்தபடி வேளாண் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர விவசாயிகள் முன்வர வேண்டும்.  அதற்கான திட்டங்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments