குடகு, கேரள வெள்ள நிவாரண உதவி: பெங்களூரு தமிழ்ச்சங்கம் வேண்டுகோள்
கர்நாடகத்தின் குடகு மாவட்டம், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை தாராளமாக வ
கர்நாடகத்தின் குடகு மாவட்டம், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை தாராளமாக வழங்கிட வேண்டும் என்று பெங்களூரு தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலர் எஸ்.இராமசுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தின் குடகு உள்ளிட்ட மலைநாடு மாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் அண்மையில் பெய்த பெருமழை காரணமான அந்தப் பகுதிகள் வெள்ளக்காடானது.
அதிகப்படியான மழையால் கர்நாடகம், கேரளத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பியதால், தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் திறந்து விடப்பட்ட மழை வெள்ளத்தால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானோரின் துன்பங்களை உணர்ந்து, அவர்களின் குழந்தைகள், பெரியோர்கள், பெண்கள் ஆகியோரின் துயர் துடைக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் முன் வந்துள்ளது.
ஆகவே, பாதிக்கப்பட்டோருக்கு உதவி அளிக்க விரும்புவோர் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து பொருள்களாகவோ, நிதியாகவோ, மருந்துகளாகவோ, குழந்தைகளுக்குரிய உணவுப் பொருள்களாகவோ மற்றும் பெண்களுக்கான அத்தியாவசியப் பொருள்களாகவோ வழங்கலாம்.
இவ்வாறு வழங்கவுள்ளோர் வருகிற ஆகஸ்ட் 25-க்குள் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் வழங்கினால் உரியவர்களுக்குத் தேவையான உதவிகளை உரிய நேரத்தில் செய்ய முடியும்.
கொடையுள்ளம் படைத்தோர் மனம் உவந்து கொடுத்து, பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்ச் சங்க அலுவலகத்தை 080-25510062, சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரனை 9449485903, செயலர் எஸ்.இராமசுப்ரமணியனை 9886713738 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.