FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல்: களத்தில் 9,154 வேட்பாளர்கள்

முதல்கட்டமாக 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 31) தேர்தல் நடக்கவிருக்கிறது.  

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

முதல்கட்டமாக 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 31) தேர்தல் நடக்கவிருக்கிறது.  இந்தத் தேர்தல் களத்தில் 9,154 போட்டியில் உள்ளனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டில் 208 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தியது. இந்த அமைப்புகளின் பதவிக் காலம் நிகழாண்டு செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாத வரையிலான காலக்கட்டத்தில் நிறைவடையவுள்ளது.  எனவே, இவற்றுக்கான தேர்தலை இரு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 
முதல்கட்டமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டம் நீங்கலாக, சித்ரதுர்கா, தாவணகெரே, தும்கூரு, மைசூரு, சாமராஜ்நகர், தென்கன்னடம், உடுப்பி, ஹாசன், மண்டியா, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், கதக், ஹாவேரி, வடகன்னடம், கலபுர்கி, கொப்பள், பெல்லாரி, ராய்ச்சூரு, பீதர், யாதகிரி ஆகிய 21 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள், 53 நகர பஞ்சாயத்துகள், 20 பேரூராட்சிகள் உள்ளிட்ட 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது.
3 மாநகராட்சிகளில் 135 வார்டுகள், 29 நகராட்சிகளில் 927 வார்டுகளும், 53 நகர பஞ்சாயத்துகளில் 1,247 வார்டுகளும், 20 பேரூராட்சிகளில் 355 வார்டுகளும் ஆக மொத்தம் 2,664 வார்டுகளுக்கு தேர்தல்
நடக்கவிருக்கிறது. 
மும்முனைப் போட்டி: இந்தத் தேர்தலில் மஜத, காங்கிரஸ், பாஜக போட்டியிடுகின்றன. அனைத்து வார்டுகளிலும் மும்முனைப் போட்டி நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் மஜதவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்காமல், தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்புக்கு உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தல் முடிவுகள் மூன்று கட்சி தொண்டர்களிடையேயும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
களப் போட்டியில்
வேட்பாளர்கள்: இந்தத் தேர்தலில் சிவமொக்கா, மைசூரு, தும்கூரு மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சிகளில் உள்ள 135 வார்டுகளில் மொத்தம் 814 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதேபோல, 21 மாவட்டங்களில் இருக்கும் 102 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,529 வார்டுகளில் 8,340 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2,306 வேட்பாளர்களும், பாஜகவை சேர்ந்த 2,203 வேட்பாளர்களும், மஜத கட்சியை சேர்ந்த 1,397 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இதுதவிர, பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த 118, சிபிஎம் கட்சியை சேர்ந்த 30, கேபிஜேபி கட்சியை சேர்ந்த 33, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 49, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 28, பிற கட்சிகளை சேர்ந்த 41, சுயேச்சைகள் 2,134 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3 மாநகராட்சிகளின் 135 வார்டுகளில் காங்கிரஸ் 135 வேட்பாளர்களையும், பாஜக 130 வேட்பாளர்களையும், மஜத 129 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. இம்மூன்று மாநகராட்சிகளில் 350 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 102 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் காங்கிரஸ், 3 பேர் பாஜக, 16 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர். 2013-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 40 சதவீத வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.
செப். 3-இல் வாக்கு
எண்ணிக்கை: இந்தத் தேர்தலில் 29 நகராட்சிகளில் 20,06,708 வாக்காளர்களும், 53 நகர பஞ்சாயத்துகளில் 12,76,254 வாக்காளர்களும், 20 பேரூராட்சிகளில் 3,20,729 வாக்காளர்களும் ஆகமொத்தம் 36,03,691 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 29 நகராட்சிகளில் 2,067 வாக்கு இயந்திரங்களும், 53 நகர பஞ்சாயத்துகளில் 1,422 வாக்கு இயந்திரங்களும், 23 பேரூராட்சிகளில் 408 வாக்கு இயந்திரங்களும் ஆகமொத்தம் 3,897 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 
இத்தேர்தலில் முதல்முறையாக மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 40 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அனைத்துவார்டுகளிலும் பதிவாகியிருக்கும் வாக்குகள், செப்.3-ஆ ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments