FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேயர் பதவி: காங்கிரஸ் கட்சியில் செளம்யா சிவக்குமார், கங்காம்பிகே இடையே பலத்த போட்டி

பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் செப். 28-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் அப் பதவிக்கு

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் செப். 28-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் அப் பதவிக்கு செளம்யா சிவக்குமார்,  கங்காம்பிகே இடையே பலத்த போட்டி உருவாகியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் மேயராக பதவி வகிப்பவர் சம்பத்ராஜ்.  இவரது பதவிக் காலம் செப். 27-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், செப். 28-ஆம் தேதி மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  நிகழாண்டு மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மஜத, சுயேச்சைகளின் ஆதரவுடன் மாநகராட்சியில் அதிகாரத்தை பிடித்து காங்கிரஸ் கட்சி,  இந்த முறையும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதனிடையே மஜதவைச் சேர்ந்த ஒருவரை மேயர் ஆக்க வேண்டும் என்று அக் கட்சியினர் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.  காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மஜதவைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இதனால் பெங்களூரு மாநகராட்சியில் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்பதில் அக்கட்சியினர் பிடிவாதமாக உள்ளனர். 
பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில், அக் கட்சியையைச் சேர்ந்த சாந்திநகர் வார்டு செளம்யா சிவக்குமார், ஜெயநகர் வார்டு கங்காம்பிகே இடையே கடும் போட்டி நிலவுகிறது.  2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.பத்மாவதிக்கும், செளம்யா சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது.  அப்போது காங்கிரஸ் கட்சி மேலிடம் அளித்த உத்தரவாதத்தையடுத்து, போட்டியிலிருந்து செளம்யா சிவக்குமார் விலகிக் கொண்டார். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சாந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.ஹாரீஷ் வெற்றி பெற்றார்.  அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், கூட்டணி ஆட்சி என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  எனவே தனக்கும் அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர் செளம்யா சிவக்குமாருக்கு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் ஹாரீஷ் உறுதியாக உள்ளார்.  
செளம்யா சிவக்குமார் ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர். கங்காம்பிகே லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்.  எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.எம்.நாகராஜ் மேயராக பதவி வகித்தார்.  அதன் பின்னர் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் மேயராகவில்லை. பெங்களூரில் ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 29.3 சதம் வசித்து வரும் நிலையில், அச் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  
முதல்வர் குமாரசாமியும் அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தந்தாலும், அக் கட்சியில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த கங்காம்பிகேவிற்கு மேயர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அகில பாரத வீரசைவ மகாசபையின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஷாம்னூர் சிவசங்கரப்பா அழுத்தம் கொடுத்து வருகிறார்.  இதனால் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்வரும், பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சருமான ஜி.பரமேஸ்வர் ஆகியோருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.  என்றாலும், காங்கிரஸ் கட்சியில் மேயர் பதவிக்கான போட்டியில் செளம்யா சிவக்குமார் வெற்றி பெற அதிக அளவு வாய்ப்புள்ளதாகக்
கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments