FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்!

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 5:18 am IST
தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேயா நதியின் குறுக்கே கர்நாடகம் கட்டியுள்ள அணை.
பகிர்:

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னை, 100 ஆண்டுகள் பழைமையானது. தற்போது, காவிரி உபரிநீரைத் தடுத்து மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகம் முயலும் பிரச்னை உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, 2016-ஆம் ஆண்டுமுதல் தென்பெண்ணையாற்றில் கர்நாடகம் அணை கட்டியது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே மற்றொரு சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தின் சிக்பளாப்பூர் நந்தி மலையில் பிறக்கும் பெண்ணையாறு, ஆந்திரம் நோக்கிப் பாய்வதை வடபெண்ணையாறு என்றும், தமிழகம் நோக்கிப் பாய்வதை தென்பெண்ணையாறு என்றும் அழைக்கிறார்கள். கர்நாடகத்தில் "தக்ஷணபினாகினி' எனப்படும் இந்த ஆறு, வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன் 497 கி.மீ தொலைவு பாய்கிறது. கர்நாடகத்தில் 93 கி.மீ. பாயும் இந்த நதி, பெங்களூரின் ஏரிகளுக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

Advertisement

Advertisement

கோலார் வழியாகத் தமிழகத்தில் நுழையும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது. இதன் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியில் 77% தமிழகத்தில் உள்ளது. ஆண்டுக்கு 62 டிஎம்சி நீர் பாயும் இந்த நதியில், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு சராசரியாக 3.5 டிஎம்சி நீர் கிடைக்கிறது.

காவிரிக்குப் பிறகு தமிழகத்தின் நீண்ட நதி இதுவே ஆகும். இதன் குறுக்கே கர்நாடகத்தில் மார்க்கண்டேயா அணையும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சாத்தனூர் உள்பட பல அணைகளும் கட்டப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் சேர்த்து 4,370 சதுர கி.மீ. பரப்புக்கு பாசனம் மற்றும் குடிநீரை தென்பெண்ணையாறு வழங்குகிறது.

கர்நாடகம் இதில் ஆண்டுக்கு 7 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்துகிறது. பிரச்னையான நீர்த்தேக்கம்: தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேயாவின் குறுக்கே, கோலார் மாவட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்க 0.5 டி.எம்.சி. கொள்ளளவில் ரூ.240 கோடியில் அணை கட்ட 2007-இல் கர்நாடகம் ஒப்புதல் அளித்து, 2013 முதல் பணிகளைத் தொடங்கியது.

இதற்கு எதிராக, 1892 மற்றும் 1933 ஒப்பந்தங்களின்படி தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால், 75% பணிகள் முடிந்ததாலும், குடிநீருக்கு முன்னுரிமை என்பதாலும் அணை கட்டப்படுவதற்குத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், 2019, நவம்பரில் தமிழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. எனினும், 4 வாரங்களுக்குள் நடுவர்மன்றம் அமைக்கத் தமிழகம் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டது. இதற்கிடையே திட்டமிட்டபடி அணையை முழுமையாகக் கட்டி முடித்தது கர்நாடகம். தீர்ப்பும் தற்போதைய நிலையும்: இதனால் தனக்கு நேரும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி 2018-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், 2019-இல் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 7 ஆண்டுகளாகியும் அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நடுவர் மன்றம் அமைக்கும் முன்மொழிவை 2023-ஆம் ஆண்டு அனுப்பியிருந்தாலும், அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவே இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வளத் துறை தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் 2024-இல் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

இந்த விஷயத்தில் இரு மாநில வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், என்.வி.அஞ்சாரியா அமர்வு, கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், தென்பெண்ணையாறு நீர்ப் பங்கீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு மாதத்துக்குள் (மார்ச் 3) நடுவர் மன்றம் அமைத்து அரசிதழில் அதன் விவரத்தை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றக் கெடு முடிந்தும் மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்கத் தவறிவிட்டது. அந்த நேரத்தில் தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருந்ததால் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நடுவர் மன்றம் அமைத்த பிறகு, எத்தனை ஆண்டுகள் கழித்து இறுதித் தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது என்றாலும், அதற்கான முதல்படியாக நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகும்.

நீதிமன்றத்தில் சட்டரீதியாகக் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அழுத்தம் தர வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments