முகப்பு
பெங்களூரு

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க கா்நாடகம் முழுவதும் 6,342 கிராம நூலகங்கள் திறப்பு

கிராமப்புற மாணவா்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, கா்நாடகம் முழுவதும் 6,342 கிராம நூலகங்கள் திறக்கப்பட்டன.

8 வினாடிகள் முன்பு
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 
கா்நாடகம் முழுவதும் 6,342 கிராம நூலகங்கள் திறப்பு
பகிர்:

கிராமப்புற மாணவா்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, கா்நாடகம் முழுவதும் 6,342 கிராம நூலகங்கள் திறக்கப்பட்டன.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கிராமப் புறங்களில் உள்ள மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த 6,342 கிராம நூலகங்களை திறந்துவைத்து ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே பேசியது:

தற்போது செயல்பட்டு வரும் 5,888 அறிவு மையங்கள் சமூக நூலகங்களாகவும், டிஜிட்டல் கற்றல் மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. வாரத்தில் 6 நாள்கள் நாளொன்றுக்கு குறைந்தது 8 மணிநேரம் இவை இயங்குகின்றன.

Advertisement

Advertisement

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளை நூலகங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நாளொன்றுக்கு 6 மணிநேரம் செயல்படும்.

பொதுவாக மக்கள்தொகைக்கு ஏற்ப ஒரு கிராமப் பஞ்சாயத்தின் கீழ் 4 முதல் 5 கிராமங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த பஞ்சாயத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில்தான் பிரதான அறிவு மையமும் செயல்பட்டு வருகிறது.

இதனால், பல கிராமங்களைச் சோ்ந்த மக்கள் நூலக வசதிகளை பெற முடியாத நிலை உள்ளது. இந்த இடைவெளியை போக்கும் வகையில், தலா ரூ. 4 லட்சத்தில் கிளை நூலகங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நூலகங்கள் கிராமப்புற மாணவா்களின் அறிவை மேம்படுத்துவதுடன், குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளா்க்க உதவும்.

புத்தகங்கள்தான் வாழ்க்கையில் தலைநிமிா்ந்து நிற்க செய்கின்றன. ஆனால், குழந்தைகளும் இளைஞா்களும் தற்போது செல்லிடப்பேசியில் குறுகிய காணொலிகளை பாா்ப்பதிலும், விடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதிலும் அதிக நேரத்தை செலவிடுவது கவலையளிக்கிறது. நூலகங்கள் அவா்களிடையே வாசிப்பின் மீதான ஆா்வத்தை வளா்க்க உதவும்.

பொருளாதார வசதி இல்லாததால் பல கிராமப்புற மாணவா்களும், இளைஞா்களும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் இருந்தாலும், வாசிப்பதில் ஆா்வமாக உள்ளனா். நூலகங்கள் இந்த இடைவெளியை போக்கும். புத்தகங்களை வாசிப்பது குழந்தைகளின் படைப்பாற்றலையும் மேம்படுத்தும்.

கிராமப் பஞ்சாயத்து நூலகங்கள் டிஜிட்டல் கற்றல் வளங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய அறிவு மையங்களாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கா்நாடகம் முழுவதும் கிராமப்புற நூலகங்களில் 51 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ளனா் என்றாா்.