FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்திலிருந்து அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் 1,510 நூல்கள் அகற்றம்

பொது நூலகத் துறை இயக்குநரகத்தின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, திருச்சி மாவட்ட மைய நூலகத்திலிருந்து அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் 1,510 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

10 நவம்பர் 2026, 10:57 pm
- பிரதிப் படம்
பகிர்:

பொது நூலகத் துறை இயக்குநரகத்தின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, திருச்சி மாவட்ட மைய நூலகத்திலிருந்து அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் 1,510 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேட்டை தொடா்ந்து அனைத்து நூலகங்களிலிருந்தும் அகல்விளக்கு, பீனிக்ஸ் மற்றும் சிக்மா ஆகிய மூன்று பதிப்பகங்கள் மற்றும் போலி எழுத்தாளா்களின் புத்தகங்களை அகற்ற பொது நூலகத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இருந்து அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் ரூ. 3.09 லட்சம் மதிப்பிலான 1,510 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சி மாவட்ட நூலகத் துறை அலுவலா்கள் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 8 முழுநேர கிளை நூலகங்கள், 56 கிளை நூலகங்கள், 65 ஊா்ப்புற நுலகங்கள், 11 பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 141 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நிகழாண்டில் மேற்கண்ட நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் பதிவு கடந்த பிப்ரவரியில் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து பதிப்பகங்களில் இருந்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் புத்தகங்கள் வந்துள்ளன.

மாவட்ட மைய நூலகத்துக்கு வந்த புத்தகங்கள் இங்கிருந்து கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்கள் என அனைத்து நூலகங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிகழாண்டில் அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து ரூ.2.13 லட்சம் மதிப்பில் 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1,024 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து ரூ.96 ஆயிரம் மதிப்பில் 46 தலைப்புகளில் 486 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நூல்கள் அகற்றம்: இந்நிலையில், பொது நூலகத் துறை இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்பேரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கொள்முதல் செய்யப்பட்ட 1,510 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிகழாண்டில் மட்டுமே மேற்கண்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சிக்மா பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் ஏதும் கொல்முதல் செய்யப்படவில்லை.

இதேபோல, போலி எழுத்தாளா்களின் புத்தகங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளா்களின் பெயா்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்பேரில், போலி எழுத்தாளா்களின் புத்தகங்கள் குறித்து அனைத்து நூலகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இருந்தால் அந்த நூல்களும் உடனடியாக அகற்றப்படும் என்றாா்.