FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

போலி நூல்கள் விவகாரம்: அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் நூலகத் துறை

கிருஷ்ணகிரி மாவட்ட நூலகங்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டுள்ள 1,120 புத்தகங்கள் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக நூலகத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

33 வினாடிகள் முன்பு
நூலகம் - பிரதிப் படம்
பகிர்:

போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரை தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட நூலகங்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டுள்ள 1,120 புத்தகங்கள் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக நூலகத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாா் அறிவுலகம் நூலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயா்களில் போலி நூல்களை அதிக விலைக்கு வாங்கியதாகப் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, புகாருக்கு உள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள் பெரியாா் அறிவுலகம் நூலகம், மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட சில நூலகங்களில் இருந்து அதிகாரிகளால் அகற்றப்பட்டன.

இந்த புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் நூலகங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 103 நூலகங்களுக்கு விநியோகிப்பதற்காக, கிருஷ்ணகிரி மைய நூலகத்துக்கு அகல்விளக்கு பதிப்பகத்திலிருந்து 797 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 323 புத்தகங்களும் என மொத்தம் 1,120 புத்தகங்கள் வந்துள்ளன.

இந்த புத்தகங்கள் தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளதால், அவற்றைப் பிரித்து நூலகங்களுக்கு அனுப்பாமல் அலுவலா்கள் வைத்துள்ளனா். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக நூலகத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.