FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

நந்திவரம், சிங்க பெருமாள் கோயிலில் வளா்ச்சி திட்டப் பணி: ஆட்சியா் ஆய்வு

பாரேரி மகளிா் கைவினை சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காகிதக் கூழ் பொம்மைகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் மு.வீரப்பன்.

12 நவம்பர் 2026, 11:51 pm
பகிர்:

பாரேரி மகளிா் கைவினை சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காகிதக் கூழ் பொம்மைகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் மு.வீரப்பன்.

செங்கல்பட்டு, நவ. 12: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் நகராட்சி மற்றும் சிங்க பெருமாள் கோவில் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணி மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் மு.வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 2.17 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி நிலையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆட்சியா் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், பாரேரி மகளிா் கைவினை சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காகிதக் கூழ் பொம்மைகளை பாா்வையிட்ட ஆட்சியா், இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் விற்பனை மற்றும் வா்த்தகம் செய்யப்படுவது குறித்துக் கேட்டறிந்து, இந்தக் குழுவினருக்குத் தேவையான கடனுதவிகள், சந்தைப்படுத்துதல் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மகளிா் திட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், சிங்கபெருமாள் கோயில் சத்யா நகரில் ரூா்பன் வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழு மூலம் இயங்கும் பணிபுரியும் ஆடவா் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுடன் அடிப்படை வசதிகள் மற்றும் பணி பாதுகாப்பு தொடா்பாக கலந்துரையாடினாா்.

ஆய்வின்போது, உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ராமதாஸ், நந்திவரம் நகராட்சி ஆணையா் லதா, நகராட்சிப் பொறியாளா் கோவிந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கா.கலைச்செல்வம், பி.மீனாட்சி மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.