அரசு மருத்துவமனைகளில் பிறந்த 249 குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம்: அமைச்சர்கள் வழங்கினர்
அரசு மருத்துவமனைகளில் பிறந்த 249 குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை அமைச்சர்கள் பா.வளர்மதி,
அரசு மருத்துவமனைகளில் பிறந்த 249 குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திங்கள்கிழமை வழங்கினர்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு "அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம்' வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.13) தொடங்கப்பட்டது. நிகழாண்டில் ரூ.67 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பெட்டகத்தில் குழந்தையை பராமரிக்கத் தேவையான துண்டு, உடை, படுக்கை, கொசு வலை, குழந்தைகளுக்கான நாப்கின், தாய்ப்பால் அதிகரிக்கச் செய்வதற்கான செüபாக்கிய சுண்டிலேகியம் உள்ளிட்ட 16 பொருள்கள் இருக்கும். இதன் மதிப்பு ரூ.1,000 ஆகும்.
முதல் நாளில்: திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளன்று சென்னை ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் பிறந்த 210 குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா திட்டத்தைத் தொடக்கி வைத்தார். மருத்துவமனையில் பிறந்த 119 குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சுமார் 20 பிரசவங்கள் நடைபெறும். திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு தெரிவித்தார்.
கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை: திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பிறந்த 130 குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்த மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சுமார் 30 பிரசவங்கள் நடைபெறுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயா, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்திமலர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஒரு மாத இருப்பு: பிரசவங்கள் நடைபெறும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒரு மாதத்துக்குத் தேவையான பரிசுப் பெட்டகங்கள் தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.