எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம்
எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்
எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாகன விழிப்புணர்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் செய்துள்ளது.
இந்தச் சங்கத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பது குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் அலுவலகத்தில் நடந்த விழாவில், பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கத்தின் செயல் இயக்குநர் அலோக் திரிபாதி கொடியசைத்து வாகன விழிப்புணர்வுப் பிரசார பயணத்தைத் தொடங்கி வைத்துக் கூறியது:
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகரித்து வரும் வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரிக்கிறது. எனவே, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வாகன விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
75 நாள்களில் 3,000 கி.மீ பயணம்: இந்த வாகனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து 75 நாள்களுக்கு 3,000 கி.மீ. வரை பயணம் செய்து விடியோ, ஆடியோ மூலம் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது. இதுதவிர, விவசாயம், தொழில், போக்குவரத்து ஆகிய துறைகளில் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
வீடுகளில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். இதைத் தவிர, பள்ளி மாணவர்கள், ஓட்டுநர்களுக்கும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என்றார் அலோக் திரிபாதி. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், செயல் இயக்குநர் (மண்டல சேவை) எஸ்.செந்தில்குமார், பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.