FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டம்: 2,649 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 2,649 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 25 மே 2018, 2:56 am IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை வாலாஜா சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 2,649 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கடந்த 3 நாள்களாகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டம் சென்னையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்காக, சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் முன்பு பல்வேறு தமிழ் இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் திரண்டனர். 
இதில், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், திரைப்பட இயக்குநர்கள் அமீர், ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள், சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை ஊர்வலமாக வர அனுமதிக்கப்பட்டனர். 
பின்னர், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்புத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார், ஊர்வலமாக வந்த 850 பேரையும் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்: பிராட்வே பேருந்து நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிமுனையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். புரசைவாக்கம் தானா தெருவில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா.வெள்ளையன், வியாபாரிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இவ்வாறு சென்னை முழுவதும் பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பூந்தமல்லி நெடுஞ்சாலை, தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இரு அமைப்புகளைச் சேர்ந்த 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுக போராட்டம்: தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் சென்னை முழுவதும் பல இடங்களில் திமுகவினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 109 பெண்கள் உள்பட 1,746 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
மு.க.ஸ்டாலின் மீது வழக்கு: இதற்கிடையே மு.க.ஸ்டாலின், திமுகவினரோடு தலைமைச் செயலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ் 425 பேர் மீது கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments