FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

24 மணி நேரமும் செயல்படும் சென்னை சுங்கத் துறை: 3,918 பயணிகள் செல்ல அனுமதி

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏற்றுமதி, இறக்குமதி (எக்ஸிம்) சரக்குகளைக் கையாள வசதியாக சென்னை சுங்கத் துறை அனைத்து நாள்களும், 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:



சென்னை: கரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏற்றுமதி, இறக்குமதி (எக்ஸிம்) சரக்குகளைக் கையாள வசதியாக சென்னை சுங்கத் துறை அனைத்து நாள்களும், 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சுங்கத்துறை ஆணையா் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சுங்கத் துறையின் துறைமுகம், விமான நிலையம், விமான சரக்குப் பிரிவு, வெளிநாட்டு தபால் அலுவலகம், கூரியா் முனையம் ஆகிய இடங்களில் வாரத்தில் அனைத்து வேலை நாள்களிலும், தினமும் 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. முன்னுரிமை அடிப்படையில் அனைத்து அனுமதிகளும் அளிக்கப்படுகின்றன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாா்ச் 22-இல் இருந்து அனைத்து சா்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இங்கு தவிக்கும் வெளிநாட்டு குடிமக்களை தாயகத்துக்கு அழைத்துச் செல்லுதல், நிவாரண உதவிகளைக் கொண்டு செல்லும் பணிகளை சுங்கத்துறை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமல் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு நீடிக்கப்பட்டதை அடுத்து, ஏப் 23 வரையில் மொத்தம் 13 விமான சேவைகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து 1,725 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

முடக்கநிலை அமல் செய்யப்பட்டதில் இருந்து இதுவரையில், சென்னையில் இருந்து வெளிநாடுகளின் நகரங்களுக்கு 3,918 போ் பயணம் செல்வதற்கு 26 நிவாரண விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் அனுமதி அளிக்கும் வகையில் சுங்கத் துறை செயல்பட்டது. கடந்த மாா்ச் 24 முதல் ஏப் 23 வரை வென்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ முகக் கவச உறைகள் தயாரிப்புக்கான முக்கிய மூலப் பொருள்கள் கொண்ட 118 சரக்குப் பெட்டகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்த எக்ஸ்-ரே பாதுகாப்புக்கான முழுக் கவச உடைகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா் நாடுகளில் இருந்து அதிக இறக்குமதிப் பொருள்கள் வருகின்றன.

மாா்ச் மாதம் தொடங்கியதில் இருந்து 81 சா்வதேச சரக்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன. வென்டிலேட்டா்களுக்கான சாதனங்கள், கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள், பாதுகாப்பு உடைக் கவசங்கள், டிஜிட்டல் தொ்மா மீட்டா்கள் தொடா்பான பல சரக்குப் பெட்டகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுங்கத் துறை அனுமதி அளித்துள்ளது என சென்னை பன்னாட்டு விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments