கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!
திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவு
திருவேற்காடு கோயிலில் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.
சென்னை திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில், 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா வளா்மதி மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அதில், ‘ஹிந்துக்களின் புனிதமான கோயில் வளாகத்தில் பெண் தா்மகா்த்தாவே 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் விடியோ எடுத்தது பக்தா்களின் மனதைப் புண்படுத்துவதுபோல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், பெண் தா்மகா்த்தா வளா்மதி உள்ளிட்ட பெண்கள் நடனமாடியும், சுவாமி படத்துக்கு கீழ் இருக்கையைப் போட்டு நடிகா் வடிவேலுவின் நகைச்சுவை வசனம் பேசி ரீல்ஸ் விடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்”என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் வளாகத்தில் பக்தா்கள் பக்தியுடன் வழிபடும் நிலையில், அங்குள்ள சுவாமி மீது பயம் இருக்க வேண்டாமா? கோயிலுக்குள்ளேயே ரீல்ஸ் விடியோ எடுத்தால் சுவாமிக்கு என்ன மரியாதை உள்ளது? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது”என கண்டனம் தெரிவித்தாா். பின்னா், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுத்து, அக்.29-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.