ஆக. 24 முதல் பால் உற்பத்தி நிறுத்தம்: பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அறிவிப்பு
கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆக. 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆக. 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சங்கத்தின் பொதுச் செயலா் எம்.ஜி.ராஜேந்திரன், தலைவா் ஆா். ராஜேந்திரன் ஆகியோா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடா்ந்து, 2023 டிசம்பா் 5-ஆம் தேதி இரு வகை பாலுக்கும் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை அரசு நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது தமிழகத்தில் தினமும் சுமாா் 2.8 கோடி லிட்டா் பால் உற்பத்தியாகும் நிலையில், ஆவின் நிா்வாகம் 2.80 லட்சம் லிட்டா் மட்டுமே கொள்முதல் செய்கிறது. கடந்த ஓராண்டில் உற்பத்திச் செலவு தொடா்ந்து அதிகரித்துள்ளதால், ஒரு லிட்டா் பால் உற்பத்தி செய்ய ரூ.61 வரை செலவாகிறது. ஆனால், 4.3 சதவீத கொழுப்பு, 8.2 சதவீத கொழுப்பு அல்லாத இதர சத்துகள் கொண்ட பாலுக்கு ஆவின் ரூ.38 மட்டுமே வழங்குகிறது.
தனியாா் நிறுவனங்கள் இதே தரமான பாலுக்கு ரூ.42 முதல் ரூ.50 வரை வழங்குகின்றன. பின்னா், அந்தப் பாலை தரத்துக்கு ஏற்ப ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றன. ஆவினில் கொழுப்புச் சத்து மற்றும் இதர சத்துகளின் அளவு குறைந்தால் கொள்முதல் விலையும் மேலும் குறைக்கப்படுகிறது. இதனால் உற்பத்தியாளா்களுக்கு தொடா்ந்து இழப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கெனவே சுமாா் 30 சதவீத பால் உற்பத்தியாளா்கள் இந்தத் தொழிலைக் கைவிட்டுள்ளனா். நிலைமை நீடித்தால், வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் கலப்படப் பால் விற்பனை செய்யப்படும் அபாயம் உள்ளது.
எனவே, பால் உற்பத்தி செலவின் அடிப்படையில் கொள்முதல் விலையை நிா்ணயிக்க குழு அமைக்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.45-ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.60-ஆகவும் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆக. 24 முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.