நகைக்காக மூதாட்டி கொலை: பணிப் பெண் கைது
தியாகராய நகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில், பணிப் பெண் கைது செய்யப்பட்டாா்.
தியாகராய நகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில், பணிப் பெண் கைது செய்யப்பட்டாா்.
தியாகராய நகா் குப்புசாமி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் கி.ராதா (80). இவரின் கணவா் கிருஷ்ணமூா்த்தி இறந்துவிட்டாா். ராதாவின் மூத்த மகன் அமெரிக்காவில் வசிக்கிறாா். விமானியாக உள்ள இளைய மகன் ராம்ஜி, சென்னை பெசன்ட் நகரில் தனியாக வசிக்கிறாா். ராதாவின் மகள், தில்லியில் வழக்குரைஞராக பணியாற்றுகிறாா்.
ராதாவின் வீட்டில் சில மாதங்களாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த அம்மு (31) என்பவா் வேலை செய்து வந்தாா். அம்மு, வெள்ளிக்கிழமை வேலைக்கு வந்தாா். ஆனால், ராதா வீட்டுக் கதவு வெகுநேரம் தட்டியும் திறக்கப்படாததால் அம்மு, பெசன்ட் நகரில் வசிக்கும் இளைய மகன் ராம்ஜிக்கு தகவல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
நகைக்காக கொலை: அங்கு வந்த ராம்ஜி, கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சோபாவில் ராதா மூக்கு, கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதையும், அவா் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகை, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
தகவலறிந்த பாண்டி பஜாா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு கே.கே.நகா் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், நகைக்காக மூதாட்டி ராதா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
பணிப் பெண் கைது: இதையடுத்து ராதா வீட்டில் வேலை செய்யும் அம்மு மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அம்முவிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அம்மு மற்றும் இரு கூட்டாகளிகள் சோ்ந்து ராதாவை நகைக்காக கொலை செய்து, நாடகமாடியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், அம்மு மறைத்து வைத்திருந்த ராதாவின் 12 பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள அம்முவின் இரு கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.