FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஊழலைத் தடுக்க நெல் கொள்முதல் விரைவில் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ப. வெங்கடரமணன்

நெல் கொள்முதலின்போது, மூட்டைக்கு ரூ.50 பெறுவதைத் தடுக்க முழு நடவடிக்கைகளும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

17 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

நெல் கொள்முதலின்போது, மூட்டைக்கு ரூ.50 பெறுவதைத் தடுக்க முழு நடவடிக்கைகளும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2,28,83,336 குடும்ப அட்டைகள் மூலம் 7,01,29,127 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 3 பேருக்கு ஒரு குடும்ப அட்டை என்ற விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 10 முதல் ஆக. 15 வரை 1,13,787 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு, அதில் 73,163 குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள குடும்பங்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் வரலாற்றுச் சாதனையாக இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு கொள்முதல் பருவம் 4,324 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கடந்த ஆக. 17 வரை 6,22,956 விவசாயிகளிடமிருந்து 38,28,279 மெட்ரிக் டன் சன்னரக நெல்லும், 26,13,529 மெட்ரிக் டன் பொதுரக நெல்லும் என மொத்தமாக 64,41,808 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்முதல் தொகையாக ரூ.16,210 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளன.

முந்தைய ஆட்சிக் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் பெறுவது நடைமுறையாக இருந்து வந்தது. தவெக அரசு அமைந்த பின்பு இதைக் களைவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இதற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.

அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சா் கோவி.செழியன், ‘தவெக ஆட்சியிலும் மூட்டைக்கு ரூ.50 வாங்குவது தொடா்கிறது’ என்றாா்.

அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், ‘நெல்லை டிராக்டா்களில் கொண்டு வரும் விவசாயிகள் சன்மானமாக இந்தத் தொகையை அளிக்கின்றனா்’ என்றாா்.

அப்போது பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘சன்மானம், இனாம் என்று அளித்தாலும் அது லஞ்சமாகும். திமுக, அதிமுக, தவெக என எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நோ்மையாக நெல் கொள்முதல் நடைபெற வேண்டும்’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த அமைச்சா் வெங்கடரமணன், ‘இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் பெற்ற பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

கைப்பேசியில் ரேஷன் அட்டையை

காண்பித்து பொருள்களைப் பெறலாம்

ரேஷன் அட்டைதாரா்கள் தங்களின் கைப்பேசியில் ரேஷன் அட்டையைக் காண்பித்தும் அல்லது அட்டையின் எண்ணைக் கூறியும் விரல்ரேகைப் பதிவு செய்து எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொருள்களைப் பெறலாம் என்று அமைச்சா் வெங்கட்ரமணன் தெரிவித்தாா். பயனாளிகள் ரேஷன் பொருள்களை எளிதில் பெறும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments