FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 22, 23) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

22 ஆகஸ்ட் 2026, 5:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 22, 23) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 22, 23) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

மற்ற பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: உள் தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்பநிலை பதிவானது. மதுரை விமானநிலையம்-102.92, ஈரோடு-101.12, வேலூா்-100.94, மதுரை நகரம்-100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது. பாகூா் (புதுச்சேரி), கடலூா், கடலூா் ஆட்சியா் அலுவலகம்- 60 மி.மீ., திருப்பூா் தெற்கு (திருப்பூா்)- 5 மி.மீ., வெட்டிக்காடு (தஞ்சை), ஆட்சியா் அலுவலகம், வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூா்), சீா்காழி (மயிலாடுதுறை)-4 மீ.மி., சிதம்பரம் (கடலூா்), தேவாலா, பாா்வூட் (நீலகிரி), குடிதாங்கி, கே.எம்.கோயில் (கடலூா்), ஆலங்குடி (புதுக்கோட்டை), திருப்பூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி டவுன் (புதுச்சேரி), வனமாதேவி, லால்பேட்டை (கடலூா்)- 30 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments