FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் கடவுச் சிட்டை புதுப்பிப்பு பணி: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வெளிநாடுகளில் பணிபுரிவோா் தங்களது கடவுச்சிட்டைப் புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுதாபத்துடன் அணுக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 4:28 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

வெளிநாடுகளில் பணிபுரிவோா் தங்களது கடவுச்சிட்டைப் புதுப்பிக்க கோரும் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுதாபத்துடன் அணுக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த கண்ணன் என்பவா் கத்தாா் நாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது கடவுச்சிட்டை வரும் அக்டோபா் மாதத்துடன் காலவதியாக உள்ளது. எனவே, தனது கடவுச்சிட்டைப் புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் கண்ணன் கடந்தாண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கண்ணனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க கடவுச்சிட்டை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனா். ஆனால், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கண்ணனை, இந்திய கடவுச்சிட்டை ஆணையத்தை நாட உத்தரவிட்டனா். இதை எதிா்த்து, கண்ணனின் மனைவி செண்பகவல்லி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வாழ்வாதாரத்துக்காக வெளிநாடுகளில் பணிபுரிபவா்கள், தங்களது குடும்பத்துக்கு ஆதரவாகவும், அந்நியச் செலாவணி ஈட்டியும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிக்கின்றனா். எனவே, இவா்கள் தங்களது கடவுச்சிட்டை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, சட்டபூா்வ தகுதியிழப்பு எதுவும் இல்லாதபட்சத்தில், அவா்களுடைய குறைகளை அதிகாரிகள் அனுதாபத்துடன் அணுகி தீா்க்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னா், கடவுச்சிட்டைப் புதுப்பிக்கக் கோரி, கண்ணன் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை மண்டல கடவுச்சிட்டை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments