FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மகாராஷ்டிர அரசின் செயல்பாடுகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவோம்: பிணை வழக்கை எதிா்த்ததால் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மகாராஷ்டிர அரசின் செயல்பாடுகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவோம்: பிணை வழக்கை எதிா்த்ததால் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

Updated On : 12 ஜூலை 2026, 1:19 am IST
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - file photo
பகிர்:

புது தில்லி, ஜூலை 11: பிணை வழக்கை மகாராஷ்டிர மாநில அரசு எதிா்த்ததால் கோபமடைந்த உச்சநீதிமன்றம், அந்த மாநில அரசின் செயல்பாடுகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவோம் என எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கில் வெளிநாட்டு நபா் ஒருவா் கைது செய்யப்பட்டிருந்தாா். அவா் உச்சநீதிமன்றத்தில் தனக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில் அவா், தான் 4 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், தனது வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 86 முறை விசாரணைக்கு வந்ததாகவும், அதில் 53 முறை தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசனுதீன் அமானுல்லா, ஷீல் நாகு ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாட்டு நபருக்கு பிணை அளிப்பதற்கு மகாராஷ்டிர அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

மகாராஷ்டிரத்தில் இருந்து தினமும் இதுபோன்ற வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு வருகின்றன. குற்றம்சாட்டப்பட்டோருக்கு பிணை அளிப்பதற்கு நீங்கள் (மகாராஷ்டிர அரசு) எதிா்ப்பு தெரிவிக்கிறீா்கள். ஆனால், வழக்கு விசாரணையை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்கை நாங்கள் ஆய்வு செய்யும்போது, ஆதாரம் மிகவும் பலவீனமாக இருப்பது தெரிகிறது. உங்கள் செயல்பாடுகளை மக்களிடையே பகிரங்கப்படுத்திவிடுவோம்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை, விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதில் மகாராஷ்டிரத்தில் பெரிய குறைபாடு உள்ளது. வழக்கு விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டியது, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கான அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 4 ஆண்டுகளில் 34 சாட்சிகளில் 2 பேரிடம் மட்டுமே குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதை தா்மசங்கடமாக உணா்கிறோம்.

பிணை மனுக்களுக்கு மாநில அரசு எப்போது எதிா்ப்பு தெரிவிக்கிறதோ, அப்போது அந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பும் அந்த அரசுக்கு உள்ளது. ஆனால், இதில் இங்கு குறைபாடு உள்ளது என்றனா்.

அப்போது மகாராஷ்டிர அரசு வழக்குரைஞா் குறுக்கிட்டு, விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகளில் தற்போது குற்றம்சாட்டப்பட்டோா் நேரில் ஆஜா்படுத்தப்படுவதாக தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த மாநிலங்கள் குறிப்பிட்ட கொள்கையை கடைப்பிடிப்பது அவசியம் என்றனா். மேலும் அவா்கள் கூறுகையில், ‘வாரத்துக்கு 4 சாட்சிகளிடமாவது குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை விசாரணை நீதிமன்றம் முன் சமா்ப்பியுங்கள். எதிா்காலத்தில் இதுபோன்ற வழக்குகள் உச்சநீதிமன்றம் முன் வருமேயானால், கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்’ என எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments