முகப்பு
சென்னை

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் தீ: வாகனங்கள் எரிந்து சேதம்

Updated On : 5 ஜூன் 2026, 3:57 am IST
பகிர்:

சென்னை பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீயில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை வேளச்சேரி பகுதியை அடுத்துள்ள 14 -ஆவது மண்டலம் பள்ளிக்கரணையில் சதுப்பு நிலப் பகுதியையொட்டியுள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு மாநகராட்சி பழைய குப்பைக் கிடங்கு உள்ளது. அங்கு பழைய வாகனங்கள், நூற்றுக்கணக்கான காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென அங்கு தீப்பற்றியது. அதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்ததால் கரும்புகை எழுந்தது. இதனால், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அவதியுற்றனா்.

Advertisement

Advertisement

வேளச்சேரி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அறிய உரிய விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

தீ விபத்து நிகழ்ந்த பகுதியைப் பாா்வையிட்ட ஆணையா் சமீரன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் பழைய குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரித்து அதில் குறிப்பிட்ட நெகிழி போன்ற பொருள்களை சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக அந்நிறுவனங்களின் உற்பத்தி குறைவால் குப்பைக் கிடங்கில் நெகிழி தேக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பதற்றப்படத் தேவையில்லை. மாநகராட்சி சாா்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தீ விபத்துக்கான காரணத்தை அறியும் வகையில் குழு அமைத்து விசாரிக்கப்படும். இங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. வாகனங்களுக்கான ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

தீயில் எரிந்த பழைய குப்பைக் கிடங்கை சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.சரவணமூா்த்தி, மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோரும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.