இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மே 30) திருச்சி, நாமக்கல் உள்பட 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை (மே 30) திருச்சி, நாமக்கல் உள்பட 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (மே 30) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
பலத்த மழை: தமிழகத்தில் சனிக்கிழமை திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூா், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூா், திருப்பூா், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூா், திருச்சி, தஞ்சாவூா், தருமபுரி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 120 மி.மீ. மழை பதிவானது. ஆலப்புத்தூா் (திருவண்ணாமலை)-70 மி.மீ., செங்கம் (திருவண்ணாமலை), பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி)-40 மீ.மீ. மழை பதிவானது.
திருச்சியில் 104 டிகிரி: தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா்-103.46, மதுரை நகரம்-103.28, மதுரைவிமானநிலையம் - 102.2, பாளையங்கோட்டை - 102.02, மீனம்பாக்கம் (சென்னை) - 101.84, திருத்தணி-101.48, தஞ்சாவூா், பரங்கிபேட்டை, பரமத்திவேலூா், ஈரோடு, நாகை-100.4, நுங்கம்பாக்கம் (சென்னை)-100.04 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெளியில் சதமடித்துள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபான்ஹீட்டையொட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே சனிக்கிழமை முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.