குளிர்பதனப் பெட்டி தீப்பற்றி வெடித்ததில் பெண் பலி: கணவர், மகன் பலத்த காயம்!
கொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்பதனப் பெட்டி வெடித்து தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தார்.
அம்பத்தூர் அருகே கொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்பதனப் பெட்டி வெடித்து தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மேலும் கணவர், மகன் ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அம்பத்தூர் அருகே கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 11}ஆவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்த்தளத்தில் வசித்து வருபவர் ரமணி (55). இவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அகிலா (48). இவர் மாற்றுத்திறனாளி. இவரது மகன் கார்த்திக் (23). இவர் தனியார் நிறுவன ஊழியர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அகிலா வீட்டுப் படுக்கை அறையிலும், ரமணி, கார்த்திக் இருவரும் முன்பக்க அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் முன்னறையில் இருந்த குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. தூக்கத்தில் இருந்த ரமணி உள்ளிட்டோருக்கு தெரியவில்லை. தொடர்ந்து குளிர்பதனப் பெட்டி வெடித்து, அதிலிருந்து குளிரூட்டும் வாயுடன் பரவிய தீ வீடு முழுவதும் மள மளவென பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு முதலில் எழுந்த கார்த்திக், முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை ரமணியை மீட்டு வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தார்.
இதில் ரமணி உடலில் பாதி இடங்களில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார். இதன் பிறகு கார்த்திக், படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் அகிலாவை மீட்க முயன்ற போது, தீ அதிக அளவில் வீடு முழுவதும் பரவியதால் அவரால் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இதில் கார்த்திக் உடலில் தீப்பற்றி காயம் அடைந்தார். அதற்குள் சத்தம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்போர், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி கீழ்த்தளம் வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொளத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து வீரர்கள் ரமணி வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் இருந்த தீயில் உடல் முழுவதும் எரிந்து கிடந்த அகிலாவின் சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து கொரட்டூர் போலீஸாரும் காயம் அடைந்த ரமணி, கார்த்திக் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அகிலாவின் சடலத்தையும் உடற்கூறு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.