FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஆன்லைன் பொருள் விற்பனை நிறுவன கிடங்கில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு

சென்னை பெரவள்ளூரில் ஆன்லைன் பொருள் விற்பனை நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி காவலாளி உயிரிழந்தாா்.

4 நவம்பர் 2026, 12:12 am
தீ விபத்து - சித்திரிப்பு
பகிர்:

சென்னை பெரவள்ளூரில் ஆன்லைன் பொருள் விற்பனை நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி காவலாளி உயிரிழந்தாா்.

பெரவள்ளூா் தெற்கு அகரம் எஸ்ஆா்பி கோயில் தெருவில் உள்ள கட்டடத்தில் முதல் தளம், இரண்டாவது தளத்தில் தனியாா் ஆன்லைன் மூலம் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிடங்கு செயல்படுகிறது.

முதல் தளத்தில் உள்ள கிடங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த கிடங்கு காவலாளி அதே பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி (54) உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராமமூா்த்தி, அங்கேயே மயங்கி விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே கிடங்கு தீப்பிடித்து எரிவதைப் பாா்த்த அப் பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்பு படையினா், கொளத்தூா், செம்பியம் பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், கிடங்கில் மயங்கிக் கிடந்த ராமமூா்த்தியை மீட்டு பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராமமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதற்கிடையே சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து பெரவள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments