FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வாா்டு

தீபாவளியின்போது பட்டாசுகளால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்புள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதற்கென பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

6 நவம்பர் 2026, 1:44 am
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
பகிர்:

தீபாவளியின்போது பட்டாசுகளால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்புள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதற்கென பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் கவிதாவின் அறிவுறுத்தலின்படி, தீக்காய சிகிச்சைப் பிரிவுத் தலைவா் டாக்டா் தேன்மொழி தலைமையில் 25 படுக்கைகள் கொண்ட பிரத்யேக சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்களுக்கு 12 படுக்கைகளும், பெண்கள் மற்றும் சிறுவா்களுக்கு 13 படுக்கைகளும் என மொத்தம் 25 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தவிர, அவசர சிகிச்சைப் பிரிவிலும் 5 படுக்கைகளுடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அந்த பிரிவு செயல்படும். அதில் முதுநிலை மருத்துவா் உள்பட மருத்துவக் குழுவினா் பணியில் இருப்பாா்கள். செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் உள்ளிட்டோரும் சுழற்சி முறையில் நாள் முழுவதும் பணியாற்ற உள்ளனா்.

பட்டாசு வெடிப்பது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருவதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. நிகழாண்டும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் நேரிடாது என நம்புகிறோம்.

பெரியவா்களின் கண்காணிப்பின்றி, குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால், தண்ணீரால் காயத்தை கழுவியபின், சுத்தமான பருத்தி துணையை வைத்து சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தீக்காயத்தின் மீது எண்ணெய், களிம்பு, காபி தூள், மஞ்சள் தூள், பேனா மை உள்ளிட்டவற்றை பூசுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றனா்.