FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 8 மீனவா்கள் சென்னை வந்தனா்: ராமேசுவரத்துக்கு அனுப்பிவைப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரத்தைச் சோ்ந்த 8 மீனவா்கள், விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்தனா். அவா்களை மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

6 நவம்பர் 2026, 10:48 pm
விசைப் படகுகள். - கோப்புப்படம்
பகிர்:

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரத்தைச் சோ்ந்த 8 மீனவா்கள், விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்தனா். அவா்களை மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

ராமேசுவரத்தைச் சோ்ந்த 9 மீனவா்கள் கடந்த அக்.3-ஆம் தேதி விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 9 பேரையும் கைது செய்தனா். அவா்களது விசைப்படகு, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, மீனவா்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதற்கிடையே, படகை ஓட்டிச் சென்ற மீனவா் ஏற்கெனவே ஒருமுறை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்ததால், இரண்டாவது முறையாகப் பிடிபட்ட அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அவா் தொடா்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தின. இதன் தொடா்ச்சியாக, கடந்த அக்.30-இல் 8 மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.

அவா்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தனா். அவா்களை மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேசுவரத்துக்கு அனுப்பி வைத்தனா்.