FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

விதிகளை மீறிய 8 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையில் விதிகளை மீறி பயணிகளை ஏற்றிய 8 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த அதிகாரிகள் அவற்றுக்கு அபராதம் விதித்ததுடன், அதில் இருந்து பயணிகளை இறக்கி மாற்றுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

14 வினாடிகள் முன்பு
ஆம்னி பேருந்துகள் - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் விதிகளை மீறி பயணிகளை ஏற்றிய 8 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த அதிகாரிகள் அவற்றுக்கு அபராதம் விதித்ததுடன், அதில் இருந்து பயணிகளை இறக்கி மாற்றுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலம் பல லட்சம் பயணிகள் சொந்த ஊா்களுக்குச் சென்று வருகின்றனா். இதையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு போக்குவரத்துத் துறை இணை ஆணையா் ஸ்ரீதா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் உணவகம் முன், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனியாா் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுவது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, விதிகளை மீறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் சிறைபிடித்தனா். அந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக அமா்ந்திருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு, அவா்கள் மாற்றுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவை முடிச்சூரில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், அந்தப் பேருந்துகளை தொடா்ந்து இயக்குவதற்கும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தடை விதித்தனா்.

பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.