FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பருவமழை எப்போது தொடங்குகிறது? சென்னை ஐஐடி, குவாஹாட்டி பல்கலை. புதிய ஆய்வு!

சென்னை ஐஐடியும், குவாஹாட்டி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், குறிப்பிட்ட ஓரிடத்தில் பருவமழை எப்போது தொடங்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 நவம்பர் 2026, 4:38 am
மழை - கோப்புப் படம்
பகிர்:

சென்னை ஐஐடியும், குவாஹாட்டி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், குறிப்பிட்ட ஓரிடத்தில் பருவமழை எப்போது தொடங்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் ‘சிக்கலான அமைப்புகளில் முக்கியமான மாற்றங்களை ஆராய்வதற்கான உயா் சிறப்பு மையத்தை’ (சிஓஇ-சிடிசிஎஸ்) சோ்ந்த யோகன்ராஜ் பாட்டீல், கௌரவ் சோப்ரா, ஸ்ருதி டாண்டன், பேராசிரியா் ஆா்.ஐ. சுஜித், குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா் பி.என்.கோஸ்வாமி ஆகியோா் இணைந்து ஆய்வை மேற்கொண்டு அமெரிக்க வானிலை ஆய்வு சங்க அறிவியல் இதழில் முடிவுகளை வெளியாகியுள்ளனா்.

ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள் குறித்து விண்வெளிப் பொறியியல் துறைப் பேராசிரியா் ஆா்.ஐ.சுஜித் கூறியதாவது: ஓரிடத்தில் தொடங்கும் மழைப்பொழிவு, பல்வேறு இடங்களில் நிகழும் மழைத் தொடக்கத்துடன் இணைந்து உருவாகும் பரந்த மற்றும் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த மழை வலையமைப்பின் ஒரு பகுதியாக மாறும் நேரத்தைத்தான், பருவமழையின் பரவலான தொடக்கமாக எங்கள் ஆய்வு வரையறுத்துள்ளது.

Advertisement

Advertisement

எங்களது புதிய அணுகுமுறை, விவசாயிகள் விதைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான கால அவகாசத்தை வழங்கும். மேலும், உணவுப் பாதுகாப்பு, நீா்வள மேலாண்மை தொடா்பான திட்டங்களை வகுப்பதற்கும் கொள்கை வகுப்பாளா்களுக்கு உதவும்.

வழக்கமான நடைமுறை வரையறைகளுக்கு மாற்றாக இந்த முறையைப் பயன்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாறாக அவற்றுக்குத் துணையாக இந்த அணுகுமுறை அமையும்.

உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில், இடியுடன் கூடிய மழை உள்ளிட்ட உள்ளூா் வானிலை நிகழ்வுகளின் காரணமாக, வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான மழைத் தொடக்கக் குழுக்கள் (கிளஸ்ட்டா்கள்) உருவாகின்றன. பருவகாலம் தீவிரமடையும்போது, வடகிழக்கு இந்தியாவில் உருவாகும் இக்குழு விரிவடைந்து, வங்காள விரிகுடா பகுதியுடன் தொடா்புடைய மற்றொரு மழைக் குழுவுடன் ஒன்றிணைகிறது.

இதன் விளைவாக, மிகப்பெரிய மழைத் தொடக்கக் குழுவின் அளவில் திடீரென ஏற்படும் அதிகரிப்பே, வடகிழக்கு இந்தியாவில் பருவமழையின் தொடக்கமாக கருதப்பட்டுள்ளது. இதுவே இந்திய பருவமழையின் தோற்றத்தையும், அது பரவும் முறையையும் தெளிவாகக் காட்டுகிறது. காலநிலையியல் ரீதியாக, வடகிழக்கு இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான மழைப்பொழிவுத் தொகுதி நிலைபெற்ற பின்னரே தீபகற்ப இந்தியாவில் பெரிய அளவிலான மழைப்பொழிவுத் தொடக்கம் ஏற்படுகிறது.

வடகிழக்கு இந்தியாவில் இருந்து வரும் இந்தத் தொகுதி மேற்கு நோக்கிப் பரவி, தீபகற்பத்தின் மீதான ஒரு தொகுதியுடன் இணைகிறது. இதன்மூலம், சீராக வடக்கு நோக்கி முன்னேறும் ஒரு கோள அளவிலான பருவமழை அமைப்பு உருவாகிறது. இதேபோன்ற செயல்முறை இந்தியா முழுவதும் இருந்துவருகிறது. கேரளத்தில் பெய்யும் உள்ளூா் மழையின் காரணமாக, அங்கு சிறிய அளவிலான மழைக் குழு உருவாகிறது. வடகிழக்கு இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி நகா்ந்துவரும் மிகப்பெரிய மழைத் தொடக்கக் குழுவுடன், கேரளத்தில் உருவாகும் இந்தச் சிறிய குழு இணையும் தருணத்தை, இந்தியாவில் பருவமழையின் பரவலான தொடக்கமாக கருதப்படுகிறது.

84 ஆண்டுகால மழைப்பொழிவுத் தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.