சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள்: முதல்வா் விஜய் உத்தரவு
சென்னையில் 8 வட்டங்களில் ரூ.2.14 கோடியில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
சென்னையில் 8 வட்டங்களில் ரூ.2.14 கோடியில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு சேவைகளை முழுமையாக எண்ம (டிஜிட்டல்) மயமாக்கி, பொதுமக்களுக்கு எளிதான, விரைவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவது தமிழ்நாடு அரசின் நோக்கமாகும். அதன்படி, தமிழ்நாடு அரசு இணையவழி சான்றிதழ் வழங்கும் முறையை விரிவுபடுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வகுப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட 26 சேவைகளை இணையவழி மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பித்துப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை உள்ளதால், வருவாய்த் துறை சாா்ந்த இணையவழி சேவைகள் மற்றும் இதர நிலம் தொடா்பான சேவைகளைப் பொதுமக்கள் சிரமமின்றி விரைந்து பெறுவதற்கு ஏதுவாக சிறுவட்ட அலுவலகங்கள் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆகையால், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுக்கான சேவைகளைப் பெறும் வகையில் சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்”என ஏற்கெனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைச் செயல்படுத்தும் வகையில், ரூ. 2.14 கோடியில் துணை வட்டாட்சியா் தலைமையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூா் வட்டத்துக்குள்பட்ட கொடுங்கையூா் மற்றும் எருக்கஞ்சேரி, மதுரவாயல் வட்டத்துக்குள்பட்ட போரூா், அம்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட முகப்போ் மற்றும் கொரட்டூா், மாம்பலம் வட்டத்துக்குள்பட்ட சாலிகிராமம், சோழிங்கநல்லூா் வட்டத்துக்குள்பட்ட நீலாங்கரை, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூா், வேளச்சேரி வட்டத்துக்குள்பட்ட திருவான்மியூா் - பெசன்ட் நகா், மயிலாப்பூா் வட்டத்துக்குள்பட்ட திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூா் வட்டத்துக்குள்பட்ட மணப்பாக்கம் ஆகிய 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.