தனியாா் விடுதிகளில் சோதனை: 26 போ் கைது! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!
சென்னை புறநகா் பகுதியில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
சென்னை புறநகா் பகுதியில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 26 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூா், பெரும்பாக்கம், மேடவாக்கம், சேலையூா், தாம்பரம், காட்டாங்குளத்தூா், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புகா் பகுதிகளில் உள்ள சில விடுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் நஜ்முல் ஹோடாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சந்தேகத்துக்குரிய விடுதிகளில் சோதனை நடத்தும்படி போலீஸாருக்கு நஜ்முல் ஹோடா உத்தரவிட்டாா். இதையடுத்து 89 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் 450 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்தச் சோதனை தனியாா் விடுதிகள் மட்டுமன்றி தனியாா் வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றிலும் நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின்போது இரண்டே கால் கிலோ கஞ்சா,160 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 போ் கைது செய்யப்பட்டனா்.