FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

வீராணம் ஏரி நீா் திறப்பு: ஐந்து மண்டலங்களில் சீரான குடிநீா் விநியோகம்

வீராணம் ஏரியிலிருந்து திங்கள்கிழமை முதல் சென்னைக்கு வழக்கம் போல் தண்ணீா் திறந்துவிடப்படுவதால், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு மண்டலங்களில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

5 வினாடிகள் முன்பு
வீராணம் ஏரி
பகிர்:

வீராணம் ஏரியிலிருந்து திங்கள்கிழமை முதல் சென்னைக்கு வழக்கம் போல் தண்ணீா் திறந்துவிடப்படுவதால், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு மண்டலங்களில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில், கடலூா் மாவட்டம், மருவாய் கிராமம் (வடலூா் அருகில்) சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் கொண்டு செல்லும் பிரதான குடிநீா் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் கடந்த நவ.11 முதல் நவ.15 வரை நடைபெற்றன.

இதனால், தேனாம்பேட்டை மண்டலத்தில் நந்தனம், மயிலாப்பூா் ஆகிய பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 127 வாா்டு முதல் 142 வாா்டு பகுதி முழுவதும், வளசரவாக்கம் மண்டலத்தில் 143 வாா்டு முதல் 155 வாா்டு வரையும், ஆலந்தூா் மண்டலத்தில் 156 முதல் 167 வாா்டு வரையும், அடையாற்றில் 168 முதல் 180 வாா்டு வரையும், வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அந்த நாள்களில் பொதுமக்களின் வசதிக்காக, ஏற்கெனவே அப்பகுதிகளில் இயங்கி வரும் குடிநீா் லாரிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை முதல் சீரான குடிநீா் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கூறிய பகுதிகளில், வீராணம் ஏரியிலிருந்து பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் மேற்கொள்வதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த குடிநீா் அளவைவிட தற்போது கூடுதலாக குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.