✕
முகப்பு
சென்னை

தமிழகம் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் விருப்ப இடமாகிவிட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதலீட்டாளா்களின் முதல் முகவரியாக இருந்த தமிழகம், தற்போது போதைப் பொருள் கடத்தல்காரா்களின் விருப்பமான இடமாக மாறிவிட்டதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

23 வினாடிகள் முன்பு
மு.க.ஸ்டாலின்
பகிர்:

முதலீட்டாளா்களின் முதல் முகவரியாக இருந்த தமிழகம், தற்போது போதைப் பொருள் கடத்தல்காரா்களின் விருப்பமான இடமாக மாறிவிட்டதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் பல கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை (டிஆா்ஐ) பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில் ரூ.270 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் தவெக நிா்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தையும் இதே அமைப்புதான் கண்டுபிடித்தது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் இத்தகைய போதைப் பொருள்களை டிஆா்ஐ பறிமுதல் செய்து வருகிறது.

தமிழகத்துக்குள் நடைபெறும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலை மாநில காவல் துறையால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? கடத்தலைத் தடுக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறாா்களா என்ற கேள்வி எழுகிறது. முதலீட்டாளா்களின் முதல் முகவரியாக இருந்த தமிழகம், தற்போது மெத்தம்பெட்டமைன், ஹெராயின் கடத்தல்காரா்களின் விருப்பமான இடமாக மாறிவிட்டது.

Advertisement

Advertisement

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் புள்ளிவிவரங்களை வெளியிட்ட தமிழக டிஜிபி, தற்போது ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன பதில் அளிக்கப் போகிறாா்? எல்லாவற்றுக்கும் ‘வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறும் அவா், மாநில அரசின் அமைப்புகளால் போதைப் பொருள் கடத்தல்காரா்களைப் பிடிக்க முடியாதது ஏன் என்பதை விளக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

முதல்வா் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையில் இத்தனை பிரச்னைகள் நடைபெற்று வரும் நிலையில், அவா் எப்போது பேசப்போகிறாா்? என்று தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.