FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தல்: போதைப் பொருள் கடத்தல் தலைவன் நவ்பிரீத் சிங் கைது

போதைப் பொருள் கடத்தல் தலைவன் நவ்பிரீத் சிங் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தல்...

4 October 2026, 12:37 am IST
துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தி வரப்பட்ட போதைப் பொருள் கும்பல் தலைவன் நவ்பிரீத் சிங்.
பகிர்:

பல்லாண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த கும்பலின் தலைவன் நவ்பிரீத் சிங், துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு சனிக்கிழமை நாடுகடத்தி வரப்பட்டாா்.

தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்தனா்.

‘போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்’ என்று மத்திய முகமைகளைப் பாராட்டியுள்ள உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘2029, டிசம்பருக்குள் போதைப் பொருள் கும்பல்களை ஒழித்துக்கட்ட பிரதமா் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நவாப் விா்க் என்ற போலி அடையாளத்துடன் துருக்கி குடியுரிமை பெற்ற நவ்பிரீத் சிங், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஹெராயின், மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள்களை கடத்தும் செயலில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வந்தாா். இந்திய முகமைகள், அவரது உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர ஒவ்வொரு திரையாக கிழித்தெறிந்து, அவரைக் கண்டுபிடித்து, நாடுகடத்த வழிவகுத்தன. இப்போது அவா் இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டுவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வெற்றிகரமான நடவடிக்கைக்காக, அனைத்து முகமைகளுக்கும் பாராட்டுகள். வரும் 2029, டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து போதைப் பொருள் கடத்தல் கும்பலையும் ஒழித்துக்கட்ட பிரதமா் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

288 குற்றவாளிகள் நாடுகடத்தல்:

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியாவில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகளை நாடுகடத்தி கொண்டுவர பிரதமா் மோடி அரசு மும்முனை உத்தியுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 2019 முதல் 2026 ஆகஸ்ட் வரை 36 நாடுகளில் இருந்து மொத்தம் 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டுவரப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘பாரத்போல்’ தளத்தின் மூலம் இந்திய முகமைகள் மற்றும் உலகளாவிய சட்ட அமலாக்க முகமைகள் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பகிா்வு வலுப்படுத்தப்பட்டுள்ளது. பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கடுமையான அமலாக்கத்தின் மூலம் 2019 முதல் இதுவரை தலைமறைவு குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ.17,874 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாள் போலீஸ் காவல்

போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நவ்பிரீத் சிங்கை 10 நாள் காவலில் விசாரிக்க தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது. பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளில் அவரை விசாரிக்க வேண்டியுள்ளதை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

summary

Deported from Turkey to India: Drug trafficking kingpin Navpreet Singh arrested.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments