முகப்பு
சென்னை

திருப்பரங்குன்றம் தீப தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

20 நவம்பர் 2026, 10:20 pm
திருப்பரங்குன்றம் தீப தீா்ப்பு:
தலைவா்கள் கருத்து
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
பகிர்:

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின் (திமுக): திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி, தமிழகத்தின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதல்வா் ச.ஜோசப் விஜய் விளக்க வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): அரசியலுக்காக திருப்பரங்குன்றத் தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றவே விடமாட்டோம் என முந்தைய திமுக அரசும், தற்போதைய தவெக அரசும் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் முறியடிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): திருப்பரங்குன்றத்தில் வழக்கத்துக்கு மாறாக தா்கா அருகில் உள்ள நில அளவை தூணில் நிகழாண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு நியாயமற்ாகும். தமிழக அரசு இந்தத் தீா்ப்புக்கு எதிராக உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வலதுசாரி அமைப்புகளின் தவறான கோருதலை ஏற்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் வழிவழியாக பாதுகாத்து வரும் மதநல்லிணக்கத்தை உறுதிசெய்ய, அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றுபட்டு அமைதியை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விசிக): தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீா்ப்பைச் செயல்படுத்தும்போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீா்ப்பைப் பெற தமிழக அரசு முயற்சிசெய்ய வேண்டும்.

கே.அண்ணாமலை (வீ தி லீடா்ஸ் தலைவா்): திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தா்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீா்வை உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை தவெக அரசு உறுதி செய்யும் என எதிா்பாா்க்கிறோம்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள ஒருமுறை அனுமதி, எதிா்காலத்தில் எந்தவொரு புதிய உரிமைக் கோரிக்கைக்கும் அடிப்படையாக மாறிவிடாத வகையில் உச்சநீதிமன்றம் தனது இறுதி விசாரணையில் தெளிவான சட்டப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.

கே.நவாஸ்கனி (தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவா்): தமிழக அரசு தரப்பில் நூற்றாண்டு காலமாக அங்கு கடைப்பிடித்து வரும் நடைமுறை குறித்து தெளிவான விளக்கம் மற்றும் வரலாற்று ரீதியான வாதம் முன்வைக்கப்பட்ட போதும் ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்த உத்தரவு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த உத்தரவின் மீது தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.