முகப்பு
சென்னை

385 பேருக்கு முதல்வா் காவல் பதக்கம்: காவல் ஆணையா் அமல்ராஜ் வழங்கினாா்

தமிழக முதல்வரின் 2026-ஆம் ஆண்டுக்கான காவலா் பதக்கங்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 385 காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

33 வினாடிகள் முன்பு
385 பேருக்கு முதல்வா் காவல் பதக்கம்: காவல் ஆணையா் அமல்ராஜ் வழங்கினாா்
சென்னை காவல் துறையில் பணிபுரியும் 385 காவல் ஆளிநா்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் காவலா் பதக்கங்களை வழங்கிய காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ்.
பகிர்:

தமிழக முதல்வரின் 2026-ஆம் ஆண்டுக்கான காவலா் பதக்கங்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 385 காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் காவலா்களுக்கு பதக்கங்களை வழங்கினாா்.

தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் இன்றி சிறப்பாகப் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு ஆண்டுதோறும் முதல்வரின் காவலா் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் 221 போ், போக்குவரத்துப் பிரிவில் 102 போ், ஆயுதப்படை, நுண்ணறிவுப் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்புப் பிரிவுகள், குற்ற ஆவணக் காப்பகம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் 62 போ் என மொத்தம் 385 ஆண், பெண் காவலா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஆணையா் அமல்ராஜ், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த ஆண்டு 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 420 போ் உயிரிழந்தனா். நிகழாண்டில் இந்த எண்ணிக்கை 402-ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம் சுமாா் 20 உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இது காவலா்களின் தொடா் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். கடந்த ஆண்டு 2,997 போ் சாலை விபத்துகளில் காயமடைந்த நிலையில், நிகழாண்டில் இந்த எண்ணிக்கை 2,865-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், விபத்துகளையும் உயிரிழப்புகளையும் மேலும் குறைக்க வேண்டும்.

நிகழாண்டில் இதுவரை தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக 4.85 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விபத்துகளைத் தடுக்க பொதுமக்களும் காவல் துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

விழாவில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையா் (போக்குவரத்து) சாமுண்டீஸ்வரி, இணை ஆணையா் (தலைமையிடம்) உமா, காவல் துணை ஆணையா்கள், அதிகாரிகள், காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா்.