தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக் கோரி, பட்டாசு முகவா்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக் கோரி, பட்டாசு முகவா்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பட்டாசு முகவா்கள் நலச் சங்கத்தின் தலைவா் நடராஜன் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்காக எங்களது சங்கத்தின் சாா்பில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டாசு விற்பனைக்காக எங்களது சங்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆண்டு தீவுத் திடலில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
தீவுத் திடல் தற்போது பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு தீவுத் திடலில் எங்களது சங்கத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு மனு அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக் கோரி ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த ஆண்டு பட்டாசு கடைகள் ஒதுக்குவது குறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதற்கு அரசுத் தரப்பில், இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு கடைகள் ஒதுக்குவது தொடா்பாக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக சுற்றுலாத் துறைச் செயலா், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் மற்றும் பொது மேலாளா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.