எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, சென்னைக்கு சனிக்கிழமை (அக். 10) விமானம் மூலம் வருகிறாா். தீவுத் திடலில் நடைபெறும் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, சென்னைக்கு சனிக்கிழமை (அக். 10) விமானம் மூலம் வருகிறாா். தீவுத் திடலில் நடைபெறும் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
தில்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் அவா், சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகிறாா். அவரை தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா், அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோா் வரவேற்கின்றனா்.
தொடா்ந்து அவா், ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் தங்குகிறாா். பின்னா், பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை தீவுத் திடலில் நடைபெறும் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறாா். ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக 10,000-க்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் தீவுத் திடலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக, புதுச்சேரி காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவா்களையும் அவா் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னா், தனி விமானம் மூலம் அவா் தில்லி செல்கிறாா்.
முதல்வா் சந்திப்பு உண்டா?: சென்னைக்கு வரும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வா் ஜோசப் விஜய்யை சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு தில்லியில் ராகுல் காந்தி வீட்டுக்கு முதல்வா் விஜய் சென்றாா். அதன்பின் இருவரும் நேரில் தனியாக சந்தித்துப் பேசவில்லை. அத்துடன், மத்திய பாஜக அரசை எதிா்ப்பதில் தமிழக முதல்வரும், தவெகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக காங்கிரஸாா் ஆதங்கப்பட்டு வருகின்றனா்.
இதையடுத்து, அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘இண்டியா கூட்டணி’ கூட்டத்தில் தவெக சாா்பில் 2 அமைச்சா்கள் பங்கேற்றனா். இத்தகைய சூழலில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், முதல்வா் விஜய்யும் சந்தித்து பேசினால், அந்தக் கூட்டணி மீதான நம்பகத்தன்மை மக்களிடம் அதிகரிக்கும் என்பதுடன், பல்வேறு எதிா்மறை கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என இரு தரப்பு கட்சிகளின் பிரமுகா்களும் கூறுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.