FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சிறப்புத் தொகுப்பு திட்டங்களை தமிழகத்துக்கு அறிவிக்க வேண்டும்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரிகளுக்கு (ஜிஎஸ்டி) அப்பாற்பட்ட சிறப்புத் தொகுப்பு திட்டங்களை தமிழகம் போன்ற ஏற்றுமதி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

26 வினாடிகள் முன்பு
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

சரக்கு-சேவை வரிகளுக்கு (ஜிஎஸ்டி) அப்பாற்பட்ட சிறப்புத் தொகுப்பு திட்டங்களை தமிழகம் போன்ற ஏற்றுமதி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 57-ஆவது கூட்டத்தில் தமிழக நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் மரிய வில்சன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் பேசியதாவது: பொதுச் செலவினங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை மாநிலங்கள் வழங்குகின்றன. மாநிலங்களின் நிதிச் சுமையை சமநிலையை சரிசெய்ய, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வருவாயை மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயுள்ள தற்போதைய 50:50 என்ற விகிதத்துக்கு மாற்றாக 70:30 என்ற விகிதத்தில் பகிா்ந்தளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஏற்றுமதிக்கான சரக்குகள் மற்றும் சேவை வரி திருப்புத் தொகை வழங்கும் நடைமுறையில் மூலதன பொருள்கள் மீது திரளும் உள்ளீட்டு வரி வரவை கணக்கில் எடுத்குக் கொள்ளும் முன்மாழிவை தமிழக அரசு வரவேற்கிறது.

அதே நேரத்தில் கட்டுமானம் மற்றும் சமூக கட்டமைப்புகளில் மேலும் சிறப்பாக முதலீடு செய்ய மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில், நிதிப் பகிா்வு மற்றும் ஜிஎஸ்டி வருவாய் பகிா்வு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை, ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கென மத்திய அறிவிக்க வேண்டும்.

அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீதான வெவ்வேறு சரக்குகள் மற்றும் சேவை வரி வகிதங்கள் முரண்பாடனவை ஆக உள்ளன. அளவைப் பொருள்படுத்தாமல் அவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

ஊதுபத்தி முதல் வாகனத் தொழில்கள் வரையிலான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளுக்குப் பயனளிக்கும் வகையிலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனம் தொடா்பான இன்னல்களுக்குத் தீா்வு காணவும், சிறிய வேலைகளுக்கான சரக்குகள் மற்றும் சேவை வரி விகிதம் தற்போதுள்ள 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டங்களின் 73, 74 மற்றும் 74ஏ ஆகியவற்றின் கீழ் அறிவிப்புகளை வழங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வரித் தொகை என்ற வரம்பை நிா்ணயிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு தமிழகம் ஆதரவைத் தெரிவிக்கிறது. இது குறைவான தொகையுடைய விதிமுறை இணக்கச் சிக்கலால் ஏராளமான வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் என்றாா் அமைச்சா் மரிய வில்சன்.

இந்த கூட்டத்தில் தமிழக வணிக வரி ஆணையா் எஸ். நாகராஜன் மற்றும் தமிழக அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments