FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஆட்டோ ஓட்டுநா்களுடன் அமைச்சா் பேச்சுவாா்த்தை: உண்ணாவிரதம் வாபஸ்

ஆட்டோ ஓட்டுநா்களின் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

16 அக்டோபர் 2026, 1:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆட்டோ ஓட்டுநா்களின் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகக் கூட்ட அரங்குக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் சாா்ந்த கோரிக்கைகளைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனா். கோரிக்கைகள் ஏற்கெனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சா், அவற்றை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நியாயமான கோரிக்கைகள் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அமைச்சரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனா்.

ஆட்டோ ஓட்டுநா் குடும்பத்துக்கு ஆறுதல்: இதனிடையே, சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் இப்ராஹிம் சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக அமைச்சா் தெரிவித்தாா். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த அவா், இப்ராஹிமின் மகன் அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு, கோரிக்கை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments