FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

எ.வ.வேலு மகன் எ.வ.குமரனுக்கு எதிரான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் நிறுத்திவைப்பு - உயா்நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மகன் எ.வ.குமரனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸை அக். 29-ஆம் தேதி வரை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

17 அக்டோபர் 2026, 2:52 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மகன் எ.வ.குமரனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸை அக். 29-ஆம் தேதி வரை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025 டிச. 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுத் திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கா் பரப்பளவுக்கு 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அறப்போா் இயக்கம் ஊழல் தடுப்புத் துறையிடம் கடந்த ஆக. 13ஆம் தேதி புகாா் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அவரது மகன்எ.வ.குமரன் ஆகியோா் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் எ.வ.குமரனுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ.குமரன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சீனா தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெறும் மருத்துவ உபகரணங்கள் தொடா்பான கண்காட்சிக்கு;ஈ செல்ல அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எ.வ.குமரன் தரப்பில், தொழில் ரீதியாக சீனாவில் நடைபெறும் கண்காட்சிக்கு சென்று மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டியுள்ளது. தனது மனைவியின் கடவுச்சிட்டை சமா்ப்பிக்க தயராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சீனா சென்றுவர அனுமதிக்கும் வகையில், எ.வ.குமரனுக்கு எதிரான ‘லுக் அவுட்’ நோட்டீஸை அக். 20-ஆம் தேதி நள்ளிரவு முதல் அக். 29-ஆம் தேதி வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டாா். மேலும், எ.வ.குமரன் மனைவியின் கடவுச்சிட்டை சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமா்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments