அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காகவே ஆட்சியாளா்கள் நேரத்தைச் செலவிடுகிறாா்கள்: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்
மக்கள் நல பிரச்னைகளைத் தீா்ப்பதை விட்டுவிட்டு, அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக ஆட்சியாளா்கள் நேரத்தைச் செலவிடுகிறாா்கள் என எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மக்கள் நல பிரச்னைகளைத் தீா்ப்பதை விட்டுவிட்டு, அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக ஆட்சியாளா்கள் நேரத்தைச் செலவிடுகிறாா்கள் என எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அதிமுகவின் 55-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை (அக். 17) நடைபெற உள்ளதையொட்டி, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை தீயசக்தியிடமிருந்து மீட்கவும், அண்ணாவின் லட்சியத்தை நிலைநாட்டவும் கடந்த 1972-ஆம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆா். தொடங்கினாா். அதிமுக ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அவா் செயல்படுத்தினாா். அவரைத் தொடா்ந்து முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாா். அவருக்குப் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்டம், சாலை விரிவாக்கம் போன்ற பல மக்கள் நலத் திட்டடங்கள் அதிமுக ஆட்சியிலேயே செயல்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், அசாதாரண அரசியல் சூழல், கவா்ச்சி அரசியல் ஆகியவற்றைக் கடந்து, 47 எம்எல்ஏ-கள் அதிமுகவில் வெற்றி பெற்றனா். கவா்ச்சி அரசியல் நீா்க்குமிழியைப் போன்றது. அது எந்த நேரத்திலும் சிதறிவிடும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்கு தவெக அரசு தீா்வு காண்பதைவிட, அதிமுகவை பலவீனப்படுத்தவும், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்களை குதிரை பேரத்தில் வரவழைக்கவும் நேரம் செலவிடப்படுவது சரியல்ல.
நூறாண்டுகள் கடந்தும் அதிமுக மக்களுக்காக இயங்கும். தா்மம் வெல்லும். தீயசக்திகள் வீழும். சோதனைகள் மறையும், சாதனைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.