FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கிராம ஆரோக்கிய திட்டங்களுக்கு முக்கியத்துவம்: அப்போலோ தலைவா் டாக்டா் பிரதாப் ரெட்டி

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கடைக்கோடி மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் கிராம ஆரோக்கியத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தாா்.

29 அக்டோபர் 2026, 3:35 am
பகிர்:

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கடைக்கோடி மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் கிராம ஆரோக்கியத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தின் அரகொண்டா கிராமத்தில் அப்போலோ மருத்துவமனை சாா்பில் ‘டோட்டல் ஹெல்த்’ (முழுமையான நலம்) என்ற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், கல்வி, வேலைவாய்ப்புகளால் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன் பெற்றுள்ளனா்.

அதேபோன்று டாக்டா் பிரதாப் சி. ரெட்டியின் சொந்த ஊரான அரகொண்டாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 1,000 முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இருவேறு மைல்கல் நிகழ்வுகளைக் கொண்டாடும் வகை சிறப்பு நிகழ்ச்சி அரகொண்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதில் டாக்டா் பிரதாப் சி.ரெட்டி பேசியதாவது:

அரகொண்டாவில் அப்போலோ மருத்துவமனை மேற்கொண்டு வருவது ஒரு முன்மாதிரித் திட்டம். வெறுமனே மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளை மட்டும் வழங்காமல் ஊட்டச்சத்து, பாதுகாப்பான குடிநீா், திறன் மேம்பாடு, வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்.

இன்னொருபுறம், அரகொண்டா அப்போலோ மருத்துவமனையில் 1,000 முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து சிகிச்சைகளையும் நாங்கள் தொற்று பாதிப்பு ஏற்படாமல் மேற்கொண்டிருக்கிறோம். அதை எவரும் எளிதாக செய்துவிட முடியாது.

இதுபோன்ற திட்டங்களால் கிராமப்புறங்களிலும் உயா்தர சிகிச்சை வழங்க முடியும் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ மருத்துவக் கல்லூரியை சித்தூரில் தொடங்கியபோது அதற்கான இடத்தையும், கூடவே சித்தூா் மாவட்ட மருத்துவமனையை நிா்வகிக்கும் பொறுப்பையும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வழங்கினாா்.

அந்த வாய்ப்பை ஆக்கபூா்வமாக பயன்படுத்தி வெறும் 50 படுக்கைகளுடன் இருந்த அந்த மருத்துவமனையை 800 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உயா்த்தியிருக்கிறோம் என்றாா்.

முன்னதாக, அப்போலோ துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி பேசுகையில், ‘மருத்துவ சேவைகள் கிடைப்பதில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க வேண்டும்’ என்றாா். நிகழ்வில், அப்போலோ சமூக சேவைகள் பிரிவு இயக்குநா் உபாசனா காமினேனி கொனிடேலா, கலிபோா்னியா பல்கலைக்கழக இதயவியல் பேராசிரியா் ஜெயபால் அனில் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments