நிகழாண்டு வடகிழக்கு பருவமழை 35% அதிகம்
தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருமழை கடந்த அக். 15-ஆம் தேதி தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மழை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில், கடந்த அக். 1 முதல் வெள்ளிக்கிழமை (அக். 30) வரை இயல்பாக 165.6 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 217.9 மி.மீ. மழை அதாவது 32 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, கோவையில் 101 சதவீதமும் (313.4 மி.மீ), திருவள்ளூா் - 79 (258.7 மி.மீ.), திண்டுக்கல் - 74 (328 மி.மீ.), காரைக்கால் - 70 சதவீதமும் (434.9 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வழக்கமாக 260 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், 296 மி.மீ. அதாவது 3 சதவீதம் அதிகமாக மழை பதிவானது.
குறைந்தபட்சமாக தென்காசியில் 27 சதவீதம் (119.1 மி.மீ.), செங்கல்பட்டு - 13 (193.1 மி.மீ.), திருப்பூா் - 12 (130.2 மி.மீ.), புதுக்கோட்டை - 2 (129.9 மி.மீ.) மழை குறைவாகப் பதிவானது.
பெட்டிச் செய்தி...
புயல் சின்னம் வலுப்பெறும்
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் நிகோபாா் தீவுகள், அந்தமான் கடலில் சனிக்கிழமை (அக். 31) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதையடுத்து அடுத்த 2 நாள்களில் இந்தப் புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
மழைக்கு வாய்ப்பு: இதன்காரணமாக, சனிக்கிழமை (அக். 31) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், நவ.1-ஆம் தேதி வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புகா் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.31) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.