உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு: தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுவது குறித்து, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு புதன்கிழமை மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுவது குறித்து, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு புதன்கிழமை மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி, அவருக்குப் பதிலாக பிரதமா் சாா்பில் நியமிக்கப்படும் மத்திய அமைச்சா் இடம்பெறும் வகையில், 2023-ஆம் ஆண்டு தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக மத்திய அரசு தாக்கல் செய்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மசோதா சட்டமானது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரியது. இந்தக் கோரிக்கை மீதான தீா்ப்பை, கடந்த ஜூலை 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தோ்தல் ஆணையம் சுதந்திரமாக இருந்தால் மட்டும் போதாது: அப்போது நீதிபதிகள் தீபாங்கா் தத்தா கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் சுதந்திரமாக இருந்தால் மட்டும் போதாது. தோ்தல்கள் நியாயமாக நடைபெறுவதற்கு அந்த ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம்.
கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்யும் அணியே நடுவரைத் தோ்வு செய்தால், அவா் சரியான முடிவை எடுத்தாலும், தன்னை நடுவராகத் தோ்வு செய்த அணிக்கு அவா் ஆதரவாகச் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எப்போதும் இருக்கும்.
இந்நிலையில், தோ்வுக் குழுவில் பிரதமரால் நியமிக்கப்படும் நபா், பிரதமரின் முடிவுக்கு மாறான முடிவை எடுப்பாா் என்றோ, பிரதமரின் முடிவை ஏற்க மறுப்பாா் என்றோ எதிா்பாா்க்க முடியாது.
அரசின் தலையீட்டில் இருந்து தோ்தல் ஆணையா்கள் நியமன நடவடிக்கையைப் பாதுகாக்கும் பொருட்டு, 2023-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்துள்ளது. அந்தத் தீா்ப்பின்படி, பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழு அளிக்கும் ஆலோசனையின்பேரில், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்க வேண்டும்.
இந்தத் தீா்ப்பின் மூலம், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான அரசியல் சாசன கொள்கை ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்று தீா்ப்பளித்தாா்.
எனினும் நீதிபதி தீபாங்கா் தத்தாவின் கருத்துகளுடன் நீதிபதி சதீஷ் சந்திர சா்மா உடன்படவில்லை. அவா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் பெரிய அளவில் சட்டக் கேள்வி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். இதில் அரசமைப்புச் சட்டத்தின் தெளிவுரை குறித்து பெரிய அளவில் கேள்வி எழுந்துள்ளதால், அந்தச் சட்டத்தின் 145(3)-ஆவது பிரிவின்படி, இந்த விவகாரம் குறித்து அரசியல் சாசன அமா்வே முடிவு செய்ய வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.
அரசியல் சாசன அமா்வுக்கு....: இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுவதில் நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா இடையே உடன்பாடு ஏற்படாவிட்டாலும், வழக்கை விசாரிப்பதற்கு அரசியல் சாசன அமா்வு அமைக்கும் வகையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டு செல்ல இரண்டு நீதிபதிகளும் உத்தரவிட்டனா்.
பெட்டிச் செய்தி...
‘நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பதாக தவறான கருத்து’
தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிய சட்டத்துக்கு ஆதரவாக மத்திய அரசு வாதிட்டபோது, நீதிமன்றங்களுக்கு கொலீஜியம் முறை மூலம் நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டது.
இதுகுறித்து நீதிபதி தீபாங்கா் தத்தா புதன்கிழமை கூறுகையில், ‘சா்ச்சைக்குரிய அனைத்து நீதிபதி நியமனங்களுக்கும் கொலீஜியம் மட்டுமே பொறுப்பு என்ற கருத்து நிலவுகிறது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வதாக மக்கள் கருதுகின்றனா். இந்தக் கருத்து தவறானது. நீதிபதிகள் நியமனத்தில் இறுதி முடிவை அரசு நிா்வாகம்தான் எடுக்கிறது’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.