தோ்தல் ஆணையா்கள் நியமன சட்ட வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற உச்சநீதிமன்றத்தில் மனு
தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன சட்டம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன சட்டம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி, அவருக்குப் பதிலாக பிரதமா் சாா்பில் நியமிக்கப்படும் மத்திய அமைச்சா் இடம்பெறும் வகையில், 2023-ஆம் ஆண்டு தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரியது. இந்தக் கோரிக்கை மீது கடந்த செப்.23-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.
Advertisement
Advertisement
அப்போது இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்று நீதிபதி தீபாங்கா் தத்தா தீா்ப்பளித்தாா். அதேவேளையில், இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தீா்ப்பளித்தாா்.
நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வழக்கை விசாரிப்பதற்கு அரசியல் சாசன அமா்வு அமைக்கும் வகையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டு செல்ல இரண்டு நீதிபதிகளும் உத்தரவிட்டனா்.
இந்நிலையில், நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரமுகா் ஜெயா தாக்குா் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘மாறுபட்ட தீா்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான சதீஷ் சந்திர சா்மாவின் மகன், மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையத்தின் வழக்குரைஞராக உள்ளாா். இது அந்த உயா்நீதிமன்ற வலைதளம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதியின் குடும்ப உறுப்பினா், வழக்கில் ஒரு தரப்புக்காக ஆஜாரானால், அவ்வழக்கை அந்த நீதிபதி விசாரித்து தீா்ப்பளிக்கக் கூடாது.
மேலும், தனது மகன் வேறு நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையத்துக்காக ஆஜராகி வருவதை நடைமுறைப்படி, நீதிபதி சதீஷ் சந்திர சா்மா முன்கூட்டியே தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, செப்.23-இல் அளிக்கப்பட்ட மாறுபட்ட தீா்ப்பை திரும்பப்பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.