காந்தி சாலையில் மண் குவியல் அகற்றம்
ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த மண் குவியல்கள் மழைநீரில் கரைந்து சேறும், சகதியுமாக காட்சியளித்தது குறித்து தினமணியில் படத்துடன் வெளியான செய்தி எதிரொலியாக அவற்றை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த மண் குவியல்கள் மழைநீரில் கரைந்து சேறும், சகதியுமாக காட்சியளித்தது குறித்து தினமணியில் படத்துடன் வெளியான செய்தி எதிரொலியாக அவற்றை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிப் பகுதியில் ரூ. 101.38 கோடி மதிப்பீட்டில் புதைச் சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதைச் சாக்கடை, குடிநீர்த் திட்டத்துக்காக ஸ்ரீபெரும்புதூரில் 15 வார்டுகளிலும் பள்ளங்கள் தோண்டி கழிவுநீர்க் குழாய்களை பூமியில் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பல தெருக்களில் பணிகள் நிறைவடைந்து, தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் அவ்வப்போது பெய்யும் சிறு மழைக்குக் கூட தெருச்சாலைகள் சேறும் சகதியுமாகி விடுகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் காந்தி சாலை, தேரடி, திருவள்ளூர் சாலைகளில் தற்போது புதைச் சாக்கடைத் திட்டத்துக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பணி முடிந்த இடங்களில் பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் சாலையிலேயே மண் குவிக்கப்பட்டிருப்பதால் மழைநீரில் கரைந்து சாலையில் வழிந்தோடியது.
இதனால் காந்தி சாலை சேறும், சகதியுமாகக் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த வியாழக்கிழமை, "சேறும் சகதியுமான ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலை' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக காந்தி சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து வெளியேறிய மண் குவியல்களை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டரில் மண்ணைக் கொட்டி எடுத்துச் செல்லும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.