செங்கல்பட்டு பஜார் வீதியில் ஆபத்தான நிலையில் கழிவுநீர்க் கால்வாய்: மக்கள், வியாபாரிகள் அவதி
செங்கல்பட்டு மேட்டுத் தெரு மார்க்கெட் பஜார் வீதி சந்திப்பின் சாலையில் கழிவு நீர்க் கால்வாய் தோண்டப்பட்டு திறந்தவெளியாக கேட்பாரற்று ஆபத்தான நிலையில் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள்
செங்கல்பட்டு மேட்டுத் தெரு மார்க்கெட் பஜார் வீதி சந்திப்பின் சாலையில் கழிவு நீர்க் கால்வாய் தோண்டப்பட்டு திறந்தவெளியாக கேட்பாரற்று ஆபத்தான நிலையில் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த 33 வார்டுகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரப்படாமல், கழிவுகள் அள்ளப்படாமலும், துர்நாற்றத்துடன் தூய்மையற்றும் காணப்படுகிறது. கால்வாய்களில் உள்ள கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதாலும் குப்பைக் கழிவுகளாலும் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கழிவுநீர்க் கால்வாய்களில் இருந்து உருவாகும் கொசுக்களால் நோய் தொற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்கெட் பஜார்வீதி, மேட்டுத் தெரு முச்சந்தியாக விளங்கக் கூடிய மார்க்கெட் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்கள் உடைக்கப்பட்டு தோண்டப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்க்கெட் பகுதியில் மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், காய்கறிக் கடைகள், மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள், மருந்துக் கடைகள், பேன்சி ஸ்டோர்கள், இனிப்புக் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள வசதி படைத்த பெரிய கடைகளின் உரிமையாளர்களும், சொந்த இடத்தில் கடைகளை வைத்திருப்போரும் குடிநீர் இணைப்பிற்காக அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் இரவோடு இரவாக பள்ளம் தோண்டி அறைகுறையாக மூடி விடுகின்றனர். இதையும் நகராட்சி ஊழியர்களே செய்திருப்பார்கள் என்று தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் அதைக் கண்டுகொள்வதில்லை.
பெரிய கடைகளில் கழிப்பறை கட்டும்போது கழிவுநீருக்காக செப்டிக் டேங்க் கட்டாமல் மார்க்கெட் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு இரவோடு இரவாக நேரடியாக இணைப்புகளைக் கொடுத்து விடுகின்றனர். அந்த சமயங்களில், சாலையைத் தோண்டிய பின், அறையும் குறையுமாக மூடி அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால், கழிவுநீர் சாலையில் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல் ஏற்கெனவே தோண்டப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் சரியாக மூடாததால் சிறுமழை பெய்தாலும் கழிவுநீருடன் கழிவுகளும் வெளியேறி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது.
மார்க்கெட்டிற்கு வருபவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதற்காக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்பவர்கள் இங்கு தோண்டப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டும், பள்ளத்தில் விழுந்து விடுவோம் என்ற அச்சத்துடனும் நடந்து செல்வன்றனர். மேலும், கழிவுநீர்க் கால்வாய் பள்ளம் காரணமாக, பஜார் பகுதிக்கு வாகனங்கள் மூலம் பொருள்களை கொண்டுவரும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை இயக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நகராட்சிப் பணியாளர்கள், ஊழியர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் இந்தவழியாகத்தான் சென்றாலும் இதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
எனவே, கழிவுநீர்க் கால்வாயில் அனுமதியின்றி கழிவுகளை விடும் கடைக்காரர்கள் மீதும், குடிநீர் இணைப்புக்காக அனுமதியின்றி பள்ளம் தோண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கழிவுநீர் பள்ளத்தை உடனடியாக சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.